வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா வெற்றி பெற்றபோது 60 பாயிண்ட்.. தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தபோது 40 பாயிண்ட்.. ஏன் தெரியுமா..?

By karthikeyan VFirst Published Oct 7, 2019, 4:56 PM IST
Highlights

ஆஷஸ் தொடரில் தொடங்கி தற்போது நடந்துவரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளுமே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. 
 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு உலக கோப்பை நடத்தப்பட்டுவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் உலக கோப்பை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. அண்மையில் முடிந்த ஆஷஸ் தொடர் முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடக்கும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தான். 

ஒவ்வொரு அணியுமே உள்நாட்டில் மூன்று தொடர்களிலும் வெளிநாட்டில் மூன்று தொடர்களிலும் ஆடும். இறுதியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டியில் மோதும். இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸில் நடக்கும். 

அந்த வகையில், ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் மொத்தமாக 120 புள்ளிகள். அந்த தொடரில் எத்தனை போட்டிகள் இருக்கிறதோ, அவற்றிற்கு 120 புள்ளிகளிலிருந்து பாயிண்ட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும். அதாவது 2 போட்டிகள் கொண்ட தொடர் என்றால், ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகள், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்றால் ஒரு வெற்றிக்கு 40 புள்ளிகள், 5 போட்டிகள் கொண்ட தொடர் என்றால் ஒரு வெற்றிக்கு 24 புள்ளிகள். 

வெற்றி அடையும் அணிக்கான பாயிண்ட் = ( 120/அந்த தொடரின் போட்டிகளின் எண்ணிக்கை).

எனவே தான் 2 போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி, ஒரு போட்டியில் வென்றபோது 60 புள்ளிகள் வழங்கப்பட்டன. 3 போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்க தொடரில், முதல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு 40 புள்ளிகள் வழங்கப்பட்டன. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான  2 போட்டியிலும் வென்ற இந்திய அணி 120 புள்ளிகளை பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வென்றதன்மூலம் 40 புள்ளிகளை பெற்றது. எனவே மொத்தமாக 160 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திலேயே நீடிக்கிறது. 
 

click me!