இங்கிலாந்து அணிக்கு புதிய ஹெட் கோச் நியமனம்

By karthikeyan VFirst Published Oct 7, 2019, 3:08 PM IST
Highlights

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 
 

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ட்ரெவெர் பேலிஸின் பதவிக்காலம் ஆஷஸ் தொடருடன் முடிந்தது. ட்ரெவெர் பேலிஸின் பயிற்சிக்காலத்தில் இங்கிலாந்து அணி சிறந்து விளங்கியுள்ளது. உலக கோப்பையை முதன்முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது இங்கிலாந்து அணி. அதைத்தொடர்ந்து ஆஷஸ் தொடரையும் இழந்துவிடாமல் 2-2 என சமன் செய்தது. ட்ரெவெர் பேலிஸின் பயிற்சிக்காலத்தில் இங்கிலாந்து அணி பல உச்சங்களை எட்டியது. 

இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர் விட்ட இடத்திலிருந்து அப்படியே தொடர்ந்து மேலும் சாதனைகளை குவிக்கக்கூடிய அளவிற்கு, அணியை வழிநடத்தி செல்லும் ஒரு பயிற்சியாளரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேடியது. 

கேரி கிறிஸ்டன், அலெக் ஸ்டீவார்ட், சில்வர்வுட் ஆகியோர் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்திய அணி 2011ல் உலக கோப்பையை வென்றபோது தலைமை பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிறிஸ்டன். தென்னாப்பிரிக்க அணிக்கும் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். எனவே பயிற்சியாளராக நல்ல அனுபவத்தை கொண்ட கேரி கிறிஸ்டன், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது. 

ஆனால் நேர்காணலில் அவரைவிட கிறிஸ் சில்வர்வுட் சிறப்பாக செயல்பட்டதால், சில்வர்வுட் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2017-18 ஆஷஸ் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!