ஐசிசி எந்த விதியை மாத்துதோ இல்லையோ.. ஆனால் அந்த ஒரு விதியை கண்டிப்பா மாத்தியே ஆகணும்

By karthikeyan VFirst Published Jul 16, 2019, 12:07 PM IST
Highlights

எல்பிடபிள்யூ-வை பொறுத்தமட்டில் கள நடுவர்கள் எப்போதுமே 100% துல்லியமாக செயல்பட முடியாது என்பதால் தான் ரிவியூவே. ஆனால் அதுவே பல தருணங்களில் அணிகளுக்கு பாதிப்பாக அமைந்துவிடுகிறது. 

ஐபிஎல்லில் தான் அம்பயர்கள் படுமொக்கையாக செயல்படுகின்றனர் என்றால், உலக கோப்பை தொடரிலும் அப்படித்தான் செயல்பட்டார்கள். அம்பயர்களின் தவறான தீர்ப்புகளாலேயே பல போட்டியின் முடிவுகள் மாறியுள்ளன. 

அரையிறுதி போட்டி, இறுதி போட்டி என நாக் அவுட் சுற்று போட்டிகளிலும் அம்பயர்களின் மோசமான செயல்பாடுகளால் போட்டியின் முடிவு மாறியுள்ளது. களநடுவர்கள் சில நேரங்களில் தவறான தீர்ப்புகளை வழங்கக்கூடும் என்பதால் தான் அவர்களின் தீர்ப்புகளை ரிவியூ செய்யும் டி.ஆர்.எஸ் முறை கொண்டுவரப்பட்டது. 

ஆனால் டி.ஆர்.எஸ் முறையின் விதிகள் அம்பயர்களின் தீர்ப்புகளை விட படுமோசமாக உள்ளது. எல்பிடபிள்யூ விவகாரங்களில் பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் என்று கொடுக்க வேண்டும். பவுலர் ஸ்டம்புக்கு நேராக வீசிய பந்து பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டாலே அவுட் கொடுத்துவிட வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். 

எல்பிடபிள்யூ-வை பொறுத்தமட்டில் கள நடுவர்கள் எப்போதுமே 100% துல்லியமாக செயல்பட முடியாது என்பதால் தான் ரிவியூவே. ஆனால் ரிவியூவில் பந்தின் பாதி பகுதி ஸ்டம்பில் பட்டால், அம்பயர் கால் என்ற வகையில் கள நடுவரின் முடிவுக்கே விடப்படுகிறது. அப்படி செய்வதால், களநடுவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை பொறுத்து வீரர்கள் வெளியேற வேண்டியோ அல்லது பவுலர்கள் வருத்தப்பட வேண்டியோ உள்ளது. 

எடுத்துக்காட்டுக்கு பார்த்தோமேயானால், அரையிறுதி போட்டியில் விராட் கோலிக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. அதை கோலி ரிவியூ செய்தார். பந்தின் பாதி பகுதி ஸ்டம்பில் பட்டதால், அம்பயர் கால் என்பதால் கள நடுவரின் முடிவுப்படி கோலி வெளியேறினார். இறுதி போட்டியில் ஜேசன் ராய்க்கு கள நடுவர் அவுட் கொடுக்காததால் நியூசிலாந்து அணி ரிவியூ செய்தது. பந்தின் பாதி பகுதி ஸ்டம்பில் பட்டதால் அம்பயர் கால் என்பதால் கள நடுவர் அவுட் கொடுக்காததால் ராய் தப்பினார். 

ஒரே மாதிரியான பந்துதான். ஆனால் கோலி அவுட், ராய் தப்பிவிட்டார். இது என்ன நியாயம்..? அம்பயர் கால் என்பதால் ரிவியூ அந்த குறிப்பிட்ட அணிக்கு திரும்ப கொடுக்கப்பட்டாலும் ரிவியூவை மட்டுமே வைத்துக்கொண்டு என்ன செய்வது..? பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் என்று விதியை மாற்ற வேண்டும். பாதி பந்து, முழு பந்து என்ற பேதங்கள் எல்லாம் இருக்கக்கூடாது. அம்பயர்களால் துல்லியமாக செயல்பட முடியாது என்பதால்தான், தவறான முடிவுகளால் எந்த அணியும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஐசிசியின் சில விதிகள், பல நேரங்களில் அணிகளுக்கு பாதிப்பாகவே அமைகிறது. 

எனவே ஐசிசி எந்த விதியை மாற்றுகிறதோ இல்லையோ, கண்டிப்பாக ரிவியூ விஷயத்தில் அம்பயர் கால் என்ற விதியை மாற்றியே தீர வேண்டும். 

click me!