#BBL கடைசி பந்தில் விக்கெட்; ஒரு ரன் வித்தியாசத்தில் ஹரிகேன்ஸ் அணி த்ரில் வெற்றி.! ஆட்டநாயகன் முஜீபுர் ரஹ்மான்

By karthikeyan VFirst Published Dec 30, 2020, 11:10 PM IST
Highlights

பிரிஸ்பேன் ஹீட் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி, ஹரிகேன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சரியாக ஆடவில்லை. ஷார்ட் டக் அவுட்டானார். பென் மெக்டெர்மோட் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  3ம் வரிசையில் இறங்கிய டேவிட் மாலன் அதிகபட்சமாக 39 ரன்கள் அடிக்க, கேப்டன் ஹேண்ட்ஸ்கம்ப் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 36 ரன்கள் அடித்தார். மெக்டெர்மோட் மற்றும் டேவிட் மாலனை வீழ்த்திய ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மான், அதன்பின்னர் கீமோ பால், வில் பார்க்கர் மற்றும் போலண்ட் ஆகியோரையும் வீழ்த்தினார். 4 ஓவர்கள் வீசி வெறும் பதினைந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் முஜீபுர் ரஹ்மான். 

முஜீபுர் ரஹ்மானின் அபாரமான பவுலிங்கால், ஹரிகேன்ஸ் அணி 20 ஓவரில் 150 ரன்கள் மட்டுமே அடித்தது. 151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பிரிஸ்பேன் அணியின் தொடக்க வீரர் மேக்ஸ் பிரயண்ட் சிறப்பாக ஆடி 32 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப, ஜேம்ஸ் பேஸ்லி மட்டும் கடைசி வரை களத்தில் நின்று அதிரடியாக ஆடி தனி ஒருவனாக போராடினார். 31 பந்தில் 49 ரன்கள் விளாசி கடைசி வரை அவர் களத்தில் இருந்தும் கூட, பிரிஸ்பேன் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், முதல் ஐந்து பந்தில் ஐந்து ரன்கள் எடுக்கபட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் மார்க் ஸ்டெக்கிட்டீ ரன் அவுட்டாக, 149 ரன்கள் அடித்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. பிரிஸ்பேன் ஹீட் அணி தோற்றிருந்தாலும், ஐந்து விக்கெட் வீழ்த்தியதற்காக, அந்த அணியின் ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
 

click me!