வான்கடே மைதானத்தில் கொட்டி தீர்க்கும் கன மழை – வெற்றி பயண ஊர்வலம் தொடருமா?

By Rsiva kumarFirst Published Jul 4, 2024, 5:03 PM IST
Highlights

டி20 உலகக் கோப்பை 2024 டிராபியை கைப்பற்றிய இந்திய அணியின் வெற்றி பயண ஊர்வலம் மரைன் டிரைவ் முதல் வான்கடே மைதானம் வரையில் நடைபெற உள்ள நிலையில் வான்கடே மைதானத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் வெற்றி பயண ஊர்வலம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியது. இதையடுத்து பார்படாஸில் தாக்கத்தை ஏற்படுத்திய பெரில் சூறாவளி அச்சுறுத்தலை கடந்து 4 நாட்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியோடு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிசிசிஐ செயலாளர் பூங்கொத்து கொடுத்து ரோகித் சர்மாவை வரவேற்றார். இதையடுத்து பிசிசிஐ தலைவர் ரோஜர் பென்னி, ஜெய் ஷா மற்றும் ரோகித் சர்மா இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து அங்கிருந்து ஹோட்டலுக்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஹோட்டல் வந்த ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உற்சாகமாக டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது. அதன் பிறகு சாம்பியன்ஸ் ஜெர்சி அணிந்து கொண்டு பிரதமர் மோடியை சந்திப்பதற்கு அவரது இல்லத்திற்கு சென்றனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் முதலில் டிராபியோடு அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் பிரதமர் மோடி டிராபியை கையில் வாங்கவில்லை. மேலும், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் டிராபியை பிடித்திருந்த நிலையில் இருவரது கையையும் பற்றியவாறு பிரதமர் மோடி போஸ் கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். மிகவும் ஜாலியாக சென்ற இந்த கலந்துரையாடலில் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி பேசியுள்ளார். அதன் பிறகு அவருடன் விருந்து அருந்திய இந்திய அணி வீரர்கள் அங்கிருந்து மும்பை விமானம் நிலையம் சென்றனர்.

இதற்கிடையில் பிரதமர் மோடியுடன் தனது மனைவி சஞ்சனா கணேசன் மற்றும் மகன் அங்கத் ஆகியோருடன் இணைந்து பும்ரா புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது மோடி தனது கையில் பும்ராவின் மகன் அங்கத்தை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதே போன்று வேகப்பந்து வீச்சாலர் அர்ஷ்தீப் சிங் தனது பெற்றோருடன் இணைந்து மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விராட் கோலியும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இணைந்து நமோ என்று அச்சிடப்பட்ட சாம்பியன் ஜெர்சியை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்துள்ளனர்.

டெல்லியிலிருந்து விமானம் மூலமாக மும்பை செல்லும் இந்திய அணி வீரர்கள் மாலை 5 மணிக்கு வெற்றி பேரணி நடத்துகின்றனர். மரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்கின்றனர். இந்திய அணி வீரர்களின் ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் பேருந்தும் தயார் நிலையில் உள்ளது. கடைசியாக இரவு 7 மணிக்கு வான்கடே மைதானத்தில் வெற்றி கொண்டாட்டமும், பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தான் தற்போது வான்கடே மைதானத்தில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊர்வலம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

click me!