சாஸ்திரியும் கோலியும் சேர்ந்து ரோஹித்துக்கு கொடுத்திருக்கும் முக்கியமான டாஸ்க்

By karthikeyan VFirst Published Sep 26, 2019, 4:11 PM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரும் இணைந்து துணை கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு முக்கியமான ஒரு பொறுப்பை வழங்கியுள்ளனர். 

இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் ரோஹித் சர்மாவுக்கு இப்போதுதான் டெஸ்ட் அணியிலும் கதவு திறந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என அசாத்தியமான சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பதோடு, ரன்களை குவித்து வருகிறார் ரோஹித் சர்மா. 

ரோஹித் சர்மா சிறந்த வீரர் மட்டுமல்லாது நல்ல கேப்டனும் கூட. விராட் கோலி இல்லாத நேரங்களில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு, வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார் ரோஹித். கேப்டனாக செயல்பட கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பொன்னான வாய்ப்பாக கருதி, தனது கேப்டன்சி திறனை வெளிப்படுத்தியுள்ளார். 

நிதாஹஸ் டிராபி, ஆசிய கோப்பை என ரோஹித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி வெற்றிகளை குவித்துள்ளது. ஐபிஎல்லில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியே 3 முறை தான் வென்றுள்ளது என்றால், இதிலிருந்தே ரோஹித்தின் கேப்டன்சி திறனை அறிந்துகொள்ள முடியும். 

கேப்டன் விராட் கோலிக்கு மிகச்சிறந்த துணையாக துணை கேப்டன் ரோஹித் சர்மா திகழ்கிறார். தோனியின் கெரியர் முடிந்துவிட்டதால், இளம் வீரர்களை சரியாக வழிநடத்த ஒரு சக்தி தேவைப்படுகிறது. கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், ரோஹித் சர்மாவை அந்த சக்தியாக பார்க்கின்றனர். 

தோனியை போலவே ரோஹித் சர்மாவும் ஆட்டத்தின் போக்கை சரியாக கணித்து அதற்கேற்ப செயல்படக்கூடியவர். அதுமட்டுமல்லாமல் ரோஹித் உள்ளுணர்வுப்படி செய்யும் செயல்களும் இந்திய அணிக்கு நல்ல பலனை அளிக்கும். அந்தவகையில், இளம் வீரர்களை களத்திலும் களத்திற்கு வெளியேயும் வழிநடத்தும் பணியை துணை கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கேப்டனும் பயிற்சியாளரும் சேர்ந்து அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் வீரர்களை வழிநடத்துவது ரோஹித்துக்கு புதிய விஷயம் அல்ல. மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, பும்ரா, ராகுல் சாஹர், மயன்க் மார்கண்டே ஆகிய இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி அவர்களை ஜொலிக்க வைத்துள்ளார்.

ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருப்பதால்தான், விராட் கோலி நல்ல கேப்டனாக திகழ்கிறார் என்று கம்பீர் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை தோல்விக்கு பின்னர், ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்ததும் குறிப்பிடத்தக்கது. 
 

click me!