
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகச்சிறந்த, மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களை கிரிக்கெட்டுக்கு கொடுத்திருக்கிறது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி, முகமது ஆசிஃப், முகமது ஆமீர், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பாகிஸ்தானிலிருந்து சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் வந்திருக்கின்றனர்.
அப்படியான பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களில் சிறந்த ஒருவர் தான் ஹசன் அலி. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலராக ஜொலித்துவரும் ஹசன் அலி, இங்கிலாந்தில் நடந்துவரும் கவுண்டி கிரிக்கெட்டில் லன்காஷைர் அணியில் ஆடிவருகிறார்.
லன்காஷைர் மற்றும் க்ளௌசெஸ்டெர்ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய க்ளௌசெஸ்டெர்ஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் மட்டுமே அடித்தது. லன்காஷைர் அணியில் ஹசன் அலி அபாரமாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய லன்காஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்ஸில் லன்காஷைர் அணி 304 ரன்கள் முன்னிலை பெற்றது.
304 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய க்ளௌசெஸ்டெர்ஷைர் அணி 247 ரன்கள் மட்டுமே அடித்ததால் இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்திய ஹசன் அலி, 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்தினார். 2வது இன்னிங்ஸில் ஜேம்ஸ் பிரேஸியை யார்க்கர் வீசி போல்டாக்கினார். அந்த மின்னல்வேக யார்க்கரில் மிடில் ஸ்டம்ப் உடைந்தது. அந்த வீடியோ லன்காஷைர் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட, அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.