அணிக்கு பிரயோஜனமே இல்லாம ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த அபிமன்யூ மிதுன்.. கர்நாடக அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஹரியானா

By karthikeyan VFirst Published Nov 29, 2019, 4:47 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹரியானா அணி 20 ஓவரில் 194 ரன்களை குவித்துள்ளது. 
 

சையத் முஷ்டாக் அலி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் கர்நாடகா மற்றும் ஹரியானா அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் ஹரியானா அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

ஹரியானா அணியின் தொடக்க வீரர்கள் சைதன்யாவும் ஹர்ஷல் படேலும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 67 ரன்களை சேர்த்தனர். ஹர்ஷல் படேல் 20 பந்தில் 34 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷிவம் சௌஹான் 6 ரன்களில் அவுட்டானார். 

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சைதன்யா அரைசதம் அடித்தார். 35 பந்தில் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் சைதன்யா. நான்காம் வரிசையில் இறங்கிய ஹிமான்ஷு ராணா, அதிரடியாக ஆடி கர்நாடக பவுலிங்கை தெறிக்கவிட்டார். வெறும் 34 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்தார். அதிரடி இன்னிங்ஸை ஆடி ஹரியானா அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திய ஹுமான்ஷு ராணாவை கடைசி ஓவரின் முதல் பந்தில் வீழ்த்தினார் அபிமன்யூ மிதுன். 

அதன்பின்னர் அடுத்தடுத்த பந்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தினார் மிதுன். ஹிமான்ஷுவை வீழ்த்தியதற்கு அடுத்தடுத்த பந்துகளில் ராகுல் டெவாட்டியா, சுமித் குமார், அமித் மிஷ்ரா ஆகியோரை வீழ்த்தினார். கடைசி ஓவரில் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மிதுன், ஐந்தாவது பந்தை விடுத்து, கடைசி பந்திலும் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் யாரும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. 

ஆனால் மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவருக்கு பெயரை பெற்றுத்தருமே தவிர, அவரது பவுலிங்கால் அணிக்கு எந்த பலனும் இல்லை. ஏனெனில் அதற்கு முன்னதாகவே போதுமான ரன்களை குவித்துவிட்ட ஹரியானா அணி, கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும், 20 ஓவரில் 194 ரன்களை குவித்தது. 

195 ரன்கள் என்ற கடின இலக்குடன் கர்நாடக அணி ஆடிவருகிறது. 
 

click me!