குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 16ஆவது லீக் போட்டியில் மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 95 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்த சீசனில் அதிக ஸ்கோர் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது லீக் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தயாளன் ஹேமலதா 74 ரன்கள் எடுத்தார். கேப்டன், பெத் மூனி 66 ரன்கள் எடுத்தார். பின்வரிசை வீராங்கனைகள் சொறப ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் 190 ரன்கள் எடுத்தது.
பின்னர் 191 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி பேட்டிங் செய்தது. இதில், யாஷ்டிகா பாட்டியா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹேலி மேத்யூஸ் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நாட் பிரண்ட் 3 ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமெலியா கெர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், 18ஆவது ஓவரில் மட்டும் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்கள் குவித்தார்.
இதில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதன் பிறகு 19ஆவது ஓவரில்10 ரன்கள் குவித்தார். கடைசியாக 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்ட, 2ஆவது பந்தில் பவுண்டரி அடித்தார். 3ஆவது மற்றும் 4ஆவது பந்தில் சிங்கிள் எடுக்கவே 5ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்தது.
மேலும், முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. இந்தப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் 95 (நாட் அவுட்) ரன்கள் அடித்ததன் மூலமாக இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். குஜராத் ஜெயின்ட்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.