
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். மும்பை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் கோபால் இடம் பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் இம்பேக்ட் பிளேயராக விளையாடுகிறார். இதே போன்று ஆர்சிபி அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆகாஷ் தீப், வில் ஜாக்ஸ் மற்றும் வைஷாக் விஜயகுமார் இடம் பெற்றுள்ளனர்.
இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 32 போட்டிகளில் 18 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஆர்சிபி 14 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் ஆர்சிபி 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இந்த சீசனில் இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் தான் ஆர்சிபிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மும்பையில் உள்ள சித்தி விநாயக் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் இஷான் கிஷான், பியூஷ் சாவ்லா, குர்ணல் பாண்டியா மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் ஹர்திக் பாண்டியா சோம்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியை பெற்றது.