ஹர்திக் பாண்டியாவை ஏமாற்றி ரூ.4.3 கோடி மோசடி செய்த ஒன்றுவிட்ட சகோதரர் கைது!

By Rsiva kumar  |  First Published Apr 11, 2024, 9:24 AM IST

ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியாவிடம் ரூ.4.3 கோடி மோசடி செய்த ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியாவை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஹர்திக் பாண்டியா, குர்ணல் பாண்டியா மற்றும் ஒன்றுவிட்ட சகோதரரான வைபவ் பாண்டியா மூவரும் இணைந்து பாலிமர் பிஸினஸ் ஒன்றை தொடங்கியிருக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியா இருவரும் தலா 40 சதவீதம் முதலீடு செய்துள்ளனர். இதே போன்று ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்திருக்கிறார்.

மேலும் நிறுவனத்தின் செயல்பாடுகளையும் வைபவ் பாண்டியா தான் கவனித்து வைத்துள்ளார். இந்த பாலிமர் நிறுவனம் மூலமாக வரும் லாபத்தை முதலீட்டிற்கு ஏற்றவாறு பிரித்துக் கொண்டனர். இந்த நிலையில் தான் நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து, வைபவ் பாண்டியா அதே நிறுவன வர்த்தகத்தில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இது குறித்து பாண்டியா சகோதரர்களிடம் தெரிவிக்கவில்லை.

Tap to resize

Latest Videos

மேலும் பாலிமர் நிறுவனத்தின் மூலமாக வரும் லாபத்தை இந்த நிறுவனத்தின் வைபவ் முதலீடு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக பாலிமர் நிறுவனத்திற்கு ரூ.3 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வைபவ் பாண்டியா பாலிமர் நிறுவனத்தின் லாபத்தின் பங்கை 20 சதவீதத்திலிருந்து 33.3 சதவீதமாக அதிகரித்துள்ளார். இந்த நிலையில் தான் இதுகுறித்து ஹர்திக் பாண்டியாவிற்கு தெரியவரவே வைபவ் பாண்டியாவிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஹர்திக் பாண்டியா பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வைபவ் பாண்டியாவை நேற்று போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னிடம் ரூ.4.3 கோடி வரையில் மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!