நான் நடுராத்திரி 2.30 மணிக்குக்கூட ஃபோன் பண்ணி பேசுற ஒரு மனுஷன் சைமண்ட்ஸ்..! ஹர்பஜன் சிங் உருக்கம்

By karthikeyan VFirst Published May 16, 2022, 2:25 PM IST
Highlights

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், அவர் இனிமையான சிறந்த மனிதர் என்றும் அவருடனான உறவு குறித்தும் ஹர்பஜன் சிங் உருக்கமாக பேசியுள்ளார்.
 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கார் விபத்தில் நேற்று உயிரிழந்தார். 1998ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய 26 சர்வதேச டெஸ்ட் மற்றும் 198 ஒருநாள் போட்டிகளில் ஆடி சுமார் 6500 ரன்களை குவித்துள்ளார். 

தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சைமண்ட்ஸ், கடும் சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். 2007ல் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடரில் தன்னை ஹர்பஜன் சிங் குரங்கு என்று திட்டியதாக பரபரப்பை கிளப்பினார் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். அந்த விவகாரத்தில் தனக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆதரவாக செயல்படவில்லை என்ற அதிருப்தி அவருக்கு இருந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு, அவரது ஃபார்ம் மோசமடைந்து, அத்துடன் அவரது கெரியரும் முடிந்தது. 

தனது கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வந்தது ஹர்பஜன் சிங்குடனான விவகாரத்திற்கு பின்னர் தான்; சொல்லப்போனால் ஹர்பஜன் சிங்கால் தான் என்று பலமுறை கூறியிருக்கிறார் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். 

ஆனால் இதே சைமண்ட்ஸூம் ஹர்பஜனும் இணைந்து ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2011 சீசனில் விளையாடியிருக்கின்றனர். சைமண்ட்ஸின் இறப்புக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், ஹர்பஜன் சிங்கும் இரங்கல் தெரிவித்திருந்தார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சைமண்ட்ஸ் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், எங்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய வரலாறு உள்ளது. நாங்கள் இருவரும் இணைந்து விளையாட வாய்ப்பளித்த ஐபிஎல்லுக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் நன்றி. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியபோது ஒரே ஓய்வறையில் இருந்தோம். அவருடன் பழகிய பின்னர் தான் அவர் எவ்வளவு இனிமையான மனிதர் என்று தெரியவந்தது. அதன்பின்னர் நாங்கள் இருவரும்நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.

அதன்பின்னர் ஒன்றாக மது அருந்துவோம். நிறைய பேசி சிரிப்போம். நள்ளிரவு 2.30 மணிக்குக்கூட நான் ஃபோன் செய்து, என்னை செய்துகொண்டிருக்கிறீர்கள்; சந்திப்போமா என கேட்கக்கூடிய நபர் சைமண்ட்ஸ். அவரது இறப்புச்செய்தி என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. அவர் இல்லை என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மிகவும் வலிமையான மனிதர். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஹர்பஜன் சிங்.
 

click me!