கெய்ல் சப்பை.. வார்னர் தான் கெத்து..! இந்திய பவுலர் அதிரடி

By karthikeyan VFirst Published May 30, 2020, 2:31 PM IST
Highlights

கெய்லை விட வார்னருக்கு பந்துவீசுவது தான் கடினம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல்லை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், வார்னர் - கெய்ல் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில்  இவர்கள் இருவருக்குமே பவர்ப்ளேயில் பந்துவீசியிருக்கிறார் ஹர்பஜன் சிங்.

ஐபிஎல்லில் வார்னர் - கெய்ல் ஆகிய இருவருமே, உலகின் அனைத்து பவுலர்களையுமே தங்களது அதிரடியான பேட்டிங்கால் தெறிக்கவிட்டுள்ளனர். பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி வாணவேடிக்கை நிகழ்த்தியிருக்கின்றனர். 

வார்னர் 126 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 43.17 சராசரியுடன் 4706 ரன்களை குவித்துள்ளார். 4 சதங்களையும் 44 அரைசதங்களையும் விளாசியுள்ளார். அதேநேரத்தில் காலத்தால் அழியாத பல சிறந்த இன்னிங்ஸ்களை ஐபிஎல்லில் ஆடியுள்ள கெய்ல், 125 போட்டிகளில் ஆடி 41.14 சராசரியுடன் 4484 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்லில் கெய்ல் 6 சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள் அடித்துள்ளார். ஐபிஎல்லில் அதிகமான சிக்ஸர், ஒரு இன்னிங்ஸில் அதிகமான ரன்(175) ஆகிய சாதனைகளை தன்னகத்தே கொண்டவர் கெய்ல்.

எனவே வார்னர் - கெய்ல் ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. இந்நிலையில், இண்டர்வியூ ஒன்றில், பவர் ஹிட்டிங் பேட்ஸ்மேன்களுக்கு எதிரான அவரது பவுலிங் திட்டம் குறித்து பேசினார். அப்போது வார்னர் - கெய்ல் குறித்தும் பேசினார். 

வார்னர் - கெய்ல் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், கெய்லை விட வார்னருக்கு பந்துவீசுவது தான் கடினம். கெய்ல் ஒரு சில ஷாட்டுகளை மட்டுமே ஆடக்கூடியவர். ஆனால் வார்னர் பல விதமான ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடுவார். கெய்லுக்கு வேகமாக பந்துவீசினால் சிக்ஸர்களை விளாசி தள்ளுவார். ஆனால் மெதுவாக வீசினால், அவர் அவ்வளவு சிறப்பாக ஆடமாட்டார். மெதுவாக வீசும்போது இறங்கிவந்து ஆடுவார். அது அவருக்கு அவ்வளவு வசதியாக இருக்காது. அவருக்கு ஐபிஎல்லில் பவர்ப்ளேயில் நிறைய பந்துவீசியிருக்கிறேன். அவருக்கு பந்துவீசுவது எனக்கு மிக எளிது. அவர் ஸ்வீப் ஷாட்டுகளை ஆடமாட்டார். மிட் ஆனில் எல்லாம் அடிக்க மாட்டார். 

ஆனால் வார்னர் அப்படி கிடையாது. வார்னர் பலவிதமான ஷாட்டுகளை ஆடுவார். பேக் ஃபூட் ஷாட், கட் ஷாட், லேட் கட், ஸ்விட்ச் ஹிட், ஸ்வீப் ஷாட்டுகள் என அனைத்து ஷாட்டுகளையும் அருமையாக ஆடுவார். ஓவர் கவர் திசையிலும் அடிப்பார், இறங்கிவந்தும் சிக்ஸர் விளாசுவார். எனவே கெய்லுடன் ஒப்பிடுகையில், வார்னருக்கு பந்துவீசுவது தான் எனக்கு கடினம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

click me!