CSK vs GT: ரிதிமான் சஹா பொறுப்பான அரைசதம்.! சிஎஸ்கேவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

Published : May 15, 2022, 07:10 PM IST
CSK vs GT: ரிதிமான் சஹா பொறுப்பான அரைசதம்.! சிஎஸ்கேவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

சுருக்கம்

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 134 ரன்கள் என்ற இலக்கை அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

ஐபிஎல் 15வது சீசனில் இன்று பிற்பகல் தொடங்கி நடந்த போட்டியில் சிஎஸ்கேவும் குஜராத் டைட்டன்ஸும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, ஷிவம் துபே, ஜெகதீசன், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பதிரானா, முகேஷ் சௌத்ரி.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், அல்ஸார் ஜோசஃப், யஷ் தயால், முகமது ஷமி.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே வெறும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய மொயின் அலி நன்றாக தொடங்கிய நிலையில், அவரும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் நிலைத்து ஆடினார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெகதீசனும் நன்றாக ஆடினார். அரைசதம் அடித்த ருதுராஜ், 16வது ஓவரில் அதிரடியாக ஆட ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அடித்து ஆட முயற்சி செய்தபோது ஆட்டமிழந்தார்.49 பந்தில் 53 ரன்கள் அடித்தார் ருதுராஜ்.

அதன்பின்னர் டெத் ஓவர்களிலும் ஷிவம்துபே, தோனி ஆகிய யாரையுமே அடித்து ஆட அனுமதிக்கவில்லை குஜராத் பவுலர்கள். கடைசி வரை களத்தில் நின்ற ஜெகதீசன், 33 பந்தில் 39 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 133 ரன்கள் அடித்தது சிஎஸ்கே அணி.

134 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் கில் 18 ரன்னிலும், மேத்யூ வேட் 20 ரன்னிலும் ஹர்திக் பாண்டியா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடிய ரிதிமான் சஹா அரைசதம் அடித்தார். இலக்கு எளிதானது என்பதால் அவசரப்படாமல் கடைசி வரை நிதானமாக நின்று விளையாடிய சஹா, போட்டியை முடித்து கொடுத்தார். 20வது ஓவரில் இலக்கை அடித்து குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஹா 57 பந்தில் 67 ரன்கள் அடித்தார்.

இந்த சீசனில் 10வது வெற்றியை பெற்ற குஜராத் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணிக்கு மற்றுமொரு தோல்வி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ajinkya Rahane: கிரிக்கெட்டுக்கு' குட்பை' சொன்ன ரஹானே.. இதுதான் காரணம்.. இன்ஸ்டாகிராமில் உருக்கம்!
ICC Rankings: 230 இடங்கள் எகிறிய வைபவ்... இளம் புயல் சூர்யவன்ஷியின் லேட்டஸ்ட் ரேங்க் என்ன?