
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 211 ரன்களை குவித்தும், அதை கட்டுப்படுத்த முடியாமல் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக அவர் 48 பந்தில் 76 ரன்களை குவித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்தில் 36 ரன்கள் அடித்தார். டெத் ஓவரில் அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 31 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவரில் 211 ரன்கள் அடித்தது இந்திய அணி.
212 ரன்கள் என்பது கடினமான இலக்குதான் என்றாலும், டேவிட் மில்லர்(64) மற்றும் வாண்டர் டசன்(75) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்களால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.
இந்த போட்டியில் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரேம் ஸ்மித், ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியை பாராட்டியிருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலுக்கு 2 ஓவர்கள் மட்டுமே பந்துவீச கொடுத்தார் கேப்டன் ரிஷப் பண்ட். அணியின் முன்னணி ஸ்பின்னரான அவர், அதிக ரன்களை முதல் 2 ஓவர்களில் வழங்கியிருந்தாலும், முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர் சாஹல். அப்படியிருக்கையில், அவர் மீது நம்பிக்கை காட்டாமல் அவருக்கு வெறும் 2ஓவர்கள் மட்டுமே வழங்கிய ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியை முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
ஆனால் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி மேம்பட்டிருப்பதாக க்ரேம் ஸ்மித் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய க்ரேம் ஸ்மித், ஒரு போட்டியில் தோற்றால் உடனே கேப்டன்சி விமர்சனத்துக்குள்ளாவது வழக்கம்தான். ஐபிஎல்லில் டெல்லி அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆடிய போட்டியில் ரிஷப் பண்ட் தவறு செய்தார். ஆனாலும் அவரை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நன்றாக கேப்டன்சி செய்தார். சரியான நேரத்தில் சரியான வீரர்களை பயன்படுத்தினார்.
தென்னாப்பிரிக்க அணி நெருக்கடியில் இருந்தபோது ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமாரை பந்துவீச வைத்தார். இதுமாதிரியான நல்ல முடிவுகளை எடுத்தார். ஆனால் பவுலர்களிடம் இருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கவேண்டும். ஆனால் ரிஷப் பண்ட்டை பொறுத்தமட்டில், அவர் பின்னோக்கி பார்த்தால், நல்ல முடிவுகளைத்தான் எடுத்திருக்கிறோம் என அவர் மார்தட்டிக்கொள்ளலாம். அவரது நம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கும் என நினைப்பதாக க்ரேம் ஸ்மித் கூறினார்.