"Well Done”டா தம்பி.. அறிமுக போட்டியில் வரலாற்று சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணாவுக்கு க்ளென் மெக்ராத் பாராட்டு

By karthikeyan VFirst Published Mar 24, 2021, 3:27 PM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்த பிரசித் கிருஷ்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆஸி., முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் க்ளென் மெக்ராத்.
 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் க்ருணல் பாண்டியா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் அறிமுகமானார்கள். அறிமுக போட்டியிலேயே க்ருணல் பாண்டியா, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த அறிமுக வீரர்(26 பந்தில் அரைசதம்), 4 விக்கெட் வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா அறிமுக ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்தனர்.

 318 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பிற்கு 14 ஓவரில் 135 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்த நிலையில், 15வது ஓவரில் முதல் விக்கெட்டாக ஜேசன் ராயை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் அறிமுக பவுலர் பிரசித் கிருஷ்ணா. அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோவை 94 ரன்களுக்கு வீழ்த்திய ஷர்துல் தாகூர், மோர்கன் மற்றும் பட்லரையும் வீழ்த்தினார். சாம் பில்லிங்ஸ் மற்றும் டாம் கரனையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்த, 42.1 ஓவரில் 251 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது. இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா, 54 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் பிரசித் கிருஷ்ணா. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் இந்திய பவுலரின் மிகச்சிறந்த பெர்ஃபாமன்ஸ் இதுதான். 

அபாரமாக பந்துவீசி சாதனை படைத்த பிரசித் கிருஷ்ணாவை ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான ஆஸி.,யை சேர்ந்த க்ளென் மெக்ராத் பாராட்டியுள்ளார். பிரசித் கிருஷ்ணாவை பாராட்டி க்ளென் மெக்ராத் இன்ஸ்டாகிராமில் இட்ட பதிவில், வாழ்த்துக்கள் பிரசித்.. 4/54 என்ற அறிமுக போட்டியில் பெஸ்ட் பவுலிங் ஃபெர்ஃபாமன்ஸை கொடுத்து, அறிமுக ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்ததற்கு வாழ்த்துக்கள்.. அபாரமான பவுலிங் என்று பிரசித் கிருஷ்ணாவை மெக்ராத் பாராட்டியுள்ளார்.
 

click me!