இங்கிலாந்துனா என்ன பெரிய கொம்பா..? தாறுமாறான காட்டடியில் தனது சாதனையை தானே முறியடித்த கெய்ல்

By karthikeyan VFirst Published Mar 3, 2019, 2:06 PM IST
Highlights

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முக்கியமான அணியாக இங்கிலாந்து அணி பார்க்கப்பட்டு வரும் நிலையில், படுமோசமாக அடித்து நொறுக்கியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. 
 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முக்கியமான அணியாக இங்கிலாந்து அணி பார்க்கப்பட்டு வரும் நிலையில், படுமோசமாக அடித்து நொறுக்கியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில், கடைசி போட்டி நேற்று நடந்தது. 

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ் சரித்தார். இங்கிலாந்து அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ஆடவில்லை. இதையடுத்து 28.1 ஓவரில் வெறும் 113 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. 

114 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கெய்ல், தொடக்கம் முதலே அடித்து ஆடினார். 17 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், வெறும் 27 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். கெய்லின் அதிரடியால் 13வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களை விளாசினார் கெய்ல். தொடர் நாயகன் விருதையும் கெய்ல் வென்றார். இந்த தொடரில் மட்டும் கெய்ல், 39 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னும் அந்த சாதனை அவரது பெயரில்தான் இருந்தது. 2015 உலக கோப்பை தொடரில் 26 சிக்ஸர்களை விளாசியிருந்தார். தனது சாதனையை தானே முறியடித்துள்ளார் கெய்ல்.
 

click me!