கழுத்த புடிச்சு வெளியில தள்ளுறதுக்கு முன்னாடி நீங்களா போறது நல்லது.. கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 21, 2019, 3:54 PM IST
Highlights

தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ரொம்ப ஓபனாக பேசியுள்ளார். தோனிக்கு நல்ல ஆலோசனை ஒன்றையும் கூறியுள்ளார். 

தோனியின் ஓய்வு குறித்த விவாதம் அவ்வப்போது தலையெடுத்து கொண்டே இருக்கும். உலக கோப்பை முடிந்ததும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. 

தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அவருக்கு அணியில் இனிமேல் இடம் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தோனி இடம்பெறவில்லை.

தோனி எப்போது ஓய்வுபெறுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்துவரும் நிலையில், அண்மையில் கேப்டன் கோலி போட்ட ஒரு ட்வீட், தோனியின் ஓய்வு குறித்த சர்ச்சையை கிளப்பிவிட்டது. 

2016 டி20 உலக கோப்பையில், அரையிறுதிக்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். தோனியுடன் இருக்கும் அந்த புகைப்படத்தை கோலி பதிவிட்டதை அடுத்து, தோனி ஓய்வறிவிக்க போகிறார் என்ற தகவல் வைரலாக பரவியது. இதையடுத்து தோனி ஓய்வு குறித்த தகவல் பொய்யானது என விளக்கமளிக்கப்பட்டது. 

தோனியின் எதிர்கால திட்டம் குறித்து தேர்வுக்குழுவும் கேப்டனும் தோனியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். 

இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ள கவாஸ்கர், தோனியின் மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு 38 வயதாகிவிட்டது. இந்திய அணி அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. எனவே தூக்கியெறியப்படுவதற்கு முன்பு, தோனி தானாக ஒதுங்கிவிடுவது நல்லது என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!