முட்டாள்தனமான பேச்சு.. நாசர் ஹுசைனை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Jul 12, 2020, 4:08 PM IST
Highlights

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைனின் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 
 

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசும்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலியை வெகுவாக புகழ்ந்து பேசினார்.

கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில், இந்திய அணிக்கு எதிராக ஆடிய கேப்டன்களில் இங்கிலாந்தின் நாசர் ஹுசைனும் ஒருவர். கங்குலி தலைமையிலான இந்திய அணி மற்றும் நாசர் ஹுசைன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையேயான 2002 நாட்வெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாது. அந்த தொடரை வென்றபோதுதான், கங்குலி டி ஷர்ட்டை கழட்டி சுற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கங்குலி தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அந்த அணி பீக்கில் இருந்த காலத்தில் ஆடிய எதிரணி கேப்டன் என்ற முறையில், அந்த இந்திய அணியின் பலத்தை அறிந்திருந்த நாசர் ஹுசைன், கங்குலியை புகழ்ந்து பேசினார். 

அப்போது, இந்திய அணியை வலுவான அணியாக உருவாக்கியது கங்குலி தான். கங்குலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது கடினமானது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உணர்ச்சி மற்றும் வெற்றி வேட்கையை புரிந்த கேப்டன் கங்குலி. கங்குலி மிகவும் ஆக்ரோஷமானவர். அவரை போன்ற வீரர்களையே அவர் அணியிலும் தேர்வு செய்தார். யுவராஜ் சிங், ஹபர்ஜன் சிங் ஆகியோர் கங்குலியை போன்றே களத்தில் ஆக்ரோஷமாகவும் முகத்தை இறுக்கமாகவும் வைத்திருப்பார்கள். ஆனால் களத்திற்கு வெளியே சந்தித்தால் மிகவும் இனிமையானவர் கங்குலி. கங்குலி கேப்டனாவதற்கு முன் இருந்த இந்திய அணி மென்மையான அணி என்று நாசர் ஹுசைன் தெரிவித்திருந்தார். 

நாசர் ஹுசைனின் கருத்து, கங்குலி கேப்டனாவதற்கு முந்தைய இந்திய கிரிக்கெட் அணியை மட்டம்தட்டும் வகையில் அமைந்திருந்தது. அதனால் நாசர் ஹுசைனுக்கு, 1970-80களில் ஆடியவர் என்ற முறையில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் சுனில் கவாஸ்கர். 

ஆங்கில ஊடகத்திற்கு கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், நாசர் ஹுசைன் என்ன சொல்ல வருகிறார்.. கங்குலின் கேப்டனாவதற்கு முன்பிருந்த இந்திய அணி எல்லாம், காலையில் எழுந்து எதிரணிக்கு குட் மார்னிங் சொல்லிவிட்டு சிரித்து கொண்டிருந்ததாக சொல்கிறாரா? ஆக்ரோஷமாக இல்லாமல் இனிமையாக நடந்துகொள்பவர்கள் வலிமையில்லாதவர்கள் என்று சொல்வது மிக மோசமான பார்வை. போட்டியுணர்வை முகாத்தில் காட்டாதவர்கள், கடினமானவர்கள் இல்லை என்று அர்த்தமா?

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், லக்‌ஷ்மண், அனில் கும்ப்ளே ஆகியோர் எல்லாம் கடினமானவர்கள் இல்லையா? களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாமல் காரியத்தில் மட்டும் கண்ணாக இருப்பவர்கள், பலவீனமானவர்களா?

1970-1980கள்ளில் இருந்த அணிகள் எப்பேர்ப்பட்டவை என்று நாசர் ஹுசைனுக்கு என்ன தெரியும்..? கங்குலி சிறந்த கேப்டன் தான். இந்திய அணியை வலுவானதாக கட்டமைத்திருந்தார். ஆனால் அதற்காக அதற்கு முந்தைய அணிகள் கடினமானவை இல்லை என்று சொல்வது முட்டாள்தனமானது என்று கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். 
 

click me!