கடைசி நாள் ஆட்டத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..! விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்

By karthikeyan VFirst Published Jul 12, 2020, 2:28 PM IST
Highlights

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 
 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் கடந்த 8ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரைக் பிராத்வெயிட் மற்றும் டௌரிச் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ப்ரூக்ஸ் மற்றும் சேஸ் ஆகியோரும் நன்றாக ஆடினர். எனவே அந்த அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் அடித்தது. 

114 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி அரைசதம் அடித்த மாத்திரத்தில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாக் கிராவ்லி அருமையாக ஆடி 76 ரன்கள் அடித்து அவுட்டானார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பேட்டிங் ஆடி 79 பந்தில் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். விரைவில் ரன் சேர்த்த ஸ்டோக்ஸ், அரைசதத்தை தவறவிட்டார். முதல் இன்னிங்ஸிலும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலுமே கிடைத்த ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆட ஸ்டோக்ஸ் தவறிவிட்டார். 

முதல் இன்னிங்ஸ் முடிவில் 114 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் அடித்துள்ளது. எனவே இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில், இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் உட் ஆகிய இருவரும் பேட்டிங்கை தொடர்வார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் வெஸ்ட் இண்டீஸ் விரைவில் வீழ்த்தும் பட்சத்தில், வெஸ்ட் இண்டீஸால் 200 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வெற்றி பெற முடியும். 

அதேவேளையில் இங்கிலாந்து பவுலர்கள் மிகச்சிறப்பாக வீசி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆர்டரை சரிப்பதன் மூலம் இங்கிலாந்துக்கும் வெற்றி வாய்ப்புள்ளது. இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருக்கும் நிலையில், கடைசி நாள் ஆட்டம் கண்டிப்பாக பரபரப்பாக இருக்கும். 
 

click me!