டீம் இந்த லெட்சணத்துல இருந்தா தோற்றுத்தான் போகணும்!! கவாஸ்கர் பரிந்துரைக்கும் 2 மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Feb 27, 2019, 11:12 AM IST
Highlights

வெற்றி கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணி, அணியில் சில மாற்றங்களை செய்தே தீர வேண்டும். அந்த வகையில், முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார். 
 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் கடுமையாக போராடிய இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. 

முதல் போட்டியில் தவானுக்கு பதிலாக கேல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அரைசதம் அடித்தார் ராகுல். அந்த போட்டியில் ராகுல் மட்டுமே இந்திய அணியில் நன்றாக பேட்டிங் ஆடினார். மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் டக் அவுட்டானார். ரிஷப் பண்ட் 3 ரன்களில் ரன் அவுட்டானார். 

வெறும் 126 ரன்களை எடுத்த இந்திய அணி, அந்த எளிய இலக்கை எளிதாக எட்டவிடாத அளவிற்கு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஆனாலும் மேக்ஸ்வெல்லின் அதிரடி அரைசதம் அந்த அணிக்கு இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் 19வது ஓவரில் அபாரமாக பந்துவீசி வெற்றி நம்பிக்கையை கொடுத்த பும்ராவின் உழைப்பை கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் சிதைத்து, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்தார். இதையடுத்து கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. 

முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது. இன்று பெங்களூருவில் நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே தீர வேண்டும். இந்த போட்டியிலும் தோற்றால் தொடரை இழக்க நேரிடும். 

வெற்றி கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணி, அணியில் சில மாற்றங்களை செய்தே தீர வேண்டும். அந்த வகையில், முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார். 

கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். அதேநேரத்தில் மூன்று விக்கெட் கீப்பர்களுடன் இந்திய அணி ஆடுவதால், களத்தில் 2 விக்கெட் கீப்பர்கள் ஃபீல்டிங் செய்ய நேர்கிறது. அவர்களால் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஃபீல்டிங் செய்ய முடியாது. அது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் ரன்கள் கிடைக்க வாய்ப்பாக அமையும். எனவே ஒரு விக்கெட் கீப்பரை நீக்கிவிட்டு தவானை அணியில் சேர்க்கலாம். ரோஹித்தும் தவானும் வழக்கம்போல தொடக்க ஜோடியாக களமிறங்கலாம். ராகுலை 4ம் வரிசையில் இறக்கினால் சரியாக இருக்கும். அதேபோல உமேஷ் யாதவையும் அணியிலிருந்து நீக்கிவிடலாம் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் தன்னம்பிக்கையிழந்து காணப்படுவதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார். இதன்மூலம் அவர் நீக்க பரிந்துரைக்கும் வீரர் தினெஷ் கார்த்திக் தான் என்பது தெரிகிறது. தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு தவானை அணியில் சேர்த்து, ராகுலை 4ம் வரிசையில் இறக்கலாம் என்பது கவாஸ்கரின் கருத்து. 

கவாஸ்கர் பரிந்துரைக்கும் அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராகுல், ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, சாஹல், மார்கண்டே, பும்ரா, விஜய் சங்கர்/கவுல்.
 

click me!