ஐபிஎல் 2020: இந்த சீசனில் ஆர்சிபி அணியின் மேட்ச் வின்னர் அவருதான்.. கோலியோ டிவில்லியர்ஸோ இல்ல

By karthikeyan VFirst Published Sep 18, 2020, 3:19 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் நாளை(சனிக்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனிலும் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணிக்கு, இந்த சீசனில் யார் மேட்ச் வின்னராக திகழ்வார் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று. ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி ஏமாற்றத்துடன் வெளியேறுவதே ஆர்சிபிக்கு வாடிக்கையாகிவிட்டது.

விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் அணியில் இருந்தும், அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் வலுவாக இல்லாததும், வீரர்களை சேர்ப்பதும் நீக்குவதுமாக, நிச்சயமற்ற தன்மையிலான அணியாக ஆர்சிபி திகழ்ந்ததும் தான் அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம்.

மேலும் அந்த அணி எப்போதுமே பேட்டிங்கில் மட்டும் வலுவான அணியாகவும் ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தமட்டில் பலவீனமான அணியாகவுமே திகழ்ந்துள்ளது. அதனால்தான் அந்த அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தும் கூட, பெரிய ஸ்கோரைக்கூட கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது.

அதுமட்டுமல்லாது இந்தியாவில் ஐபிஎல் நடக்கும்போது, அந்த அணியின் ஹோம் மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானம் சிறியது என்பதால், ஆர்சிபியின் பவுலிங்கும் பலவீனமாக இருந்ததால், பெரிய ஸ்கோர் அடித்தும் கூட நிறைய போட்டிகளில் தோற்றது. இந்த முறை ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால், அமீரக மைதானங்கள் பெரியவை என்பதாலும், அந்த ஆடுகளங்கள் ஃப்ளாட்டாக இல்லாமல், ஸ்பின்னிற்கு சாதகமாக இருப்பதாலும் இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு அது பலமாக அமையும். ஏனெனில் ஆர்சிபி அணியில் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் என தரமான ஸ்பின் யூனிட் உள்ளது.

மேலும் இந்த சீசனில் ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் மாதிரியான தரமான வீரர்களை அணியில் பெற்றிருக்கும் நிலையில், இந்த சீசனுக்கான ஆர்சிபி அணி வலுவாக உள்ளதாக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமீரக ஆடுகளங்கள், ஆர்சிபிக்கு அனுகூலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் கடுமையாக பயிற்சி செய்துவரும் ஆர்சிபி, ஆடும் லெவன் காம்பினேஷனில் அதிகமான கவனம் செலுத்திவருகிறது.

இந்நிலையில், ஆர்சிபி அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், ஆர்சிபி அணியில் கோலியும் டிவில்லியர்ஸும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒருசில நேரங்களில் அவர் சோபிக்காத பட்சத்தில், மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி அணியை காப்பாற்ற வேண்டும். இந்த சீசனில் புதிய பயிற்சியாளர்களை பெற்றிருக்கிறார்கள். அந்த அணிக்கு இந்த சீசன் சிறப்பாக இருக்கும் என நம்புவோம்.

அமீரக ஆடுகளங்கள் போகப்போக ஸ்லோவாகும். எனவே விராட் கோலியும் டிவில்லியர்ஸும் தொடக்க வீரர்களாக இறங்குவது அந்த அணிக்கு நல்ல விஷயமாக அமையும். ஏனெனில் புதிய பந்து, அருமையாக பேட்டிங்கிற்கு வரும். அவர்கள் இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினால் அடித்து நொறுக்கலாம். இந்த சீசனில் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் தான் ஆர்சிபியின் மேட்ச் வின்னராக இருப்பார். அமீரக ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், சாஹல் தான் அந்த அணியின் மேட்ச் வின்னராக திகழ்வார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி வீரர்கள்:

விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(பேட்ஸ்மேன்), தேவ்தத் படிக்கல்(பேட்ஸ்மேன்), குர்கீரத் சிங்(பேட்ஸ்மேன்), மொயின் அலி(ஆல்ரவுண்டர்), முகமது சிராஜ்(ஃபாஸ்ட் பவுலர்), நவ்தீப் சைனி(ஃபாஸ்ட் பவுலர்), பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்), பவன் நேகி(ஆல்ரவுண்டர்), ஷிவம் துபே(ஆல்ரவுண்டர்), உமேஷ் யாதவ்(ஃபாஸ்ட் பவுலர்), வாஷிங்டன் சுந்தர்(ஆல்ரவுண்டர்), சாஹல்(ஸ்பின்னர்), கிறிஸ் மோரிஸ்(தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்), ஆரோன் ஃபின்ச்(ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன்), கேன் ரிச்சர்ட்ஸன்(ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்), டேல் ஸ்டெய்ன்(தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்), இசுரு உடானா(இலங்கை ஆல்ரவுண்டர்), ஷேபாஸ் அகமது(விக்கெட் கீப்பர்), ஜோஷுவா ஃபிலிப்(ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர்), பவன் தேஷ்பாண்டே(ஆல்ரவுண்டர்).
 

click me!