அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. இந்த பையன 4ம் வரிசையில் இறக்கலாம்!! கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 13, 2019, 10:32 AM IST
Highlights

உலக கோப்பைக்கான இந்திய அணி வரும் 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், நான்காம் வரிசையில் யாரை இறக்கலாம் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் அதிரடியான ஆலோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை வரும் மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக உள்ளது. ஆனால் நீண்டகால சிக்கலாக இருந்துவரும் நான்காம் வரிசை சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. 

ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த வரிசையில் பரிசோதித்த பிறகு, ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ராயுடு சொதப்பினார். ஸ்விங் பவுலிங்கை எதிர்கொண்டு ஆட திணறுகிறார். அதேபோல மித வேகப்பந்து வீச்சையும் எதிர்கொள்ள ராயுடு திணறுகிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பியதை அடுத்து, ராயுடு இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் ராயுடு அணியிலிருந்து நீக்கப்பட்டது, அந்த இடத்திற்கு இந்திய அணி நிர்வாகம் வேறு வீரரை தேடுவதை உறுதிப்படுத்தியது. 

ராயுடு சொதப்பிய அதேவேளையில், விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடினார். எனவே விஜய் சங்கரை 4ம் வரிசையில் இறக்கினால், ஒரு பவுலிங் ஆப்சனும் கூடுதலாக கிடைக்கும். விஜய் சங்கர் நல்ல ஃபீல்டரும் கூட. மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதோடு, பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார் விஜய் சங்கர். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசைக்கு சரியாக இருப்பார்.

ஆனால் நான்காம் வரிசைக்கு பல முன்னாள் ஜாம்பவான்களும் பல பெயர்களை பரிந்துரைத்து வருகின்றனர். சூழலுக்கு ஏற்றவாறு விராட் கோலியை நான்காம் வரிசையில் இறக்குவதற்கான திட்டங்களை கூட இந்திய அணி வைத்துள்ளது. 

இதற்கிடையே, நான்காம் வரிசை வீரர் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், நான்காம் வரிசை குறித்த பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் நான்காம் வரிசை இவருக்குத்தான் என்று ஒதுக்குவதை விட சூழலுக்கு ஏற்றவாறு எந்த வீரரையும் எந்த வரிசையிலும் இறக்கலாம். அனைவருமே சிறந்த வீரர்களாகத்தான் உள்ளனர். எனவே ஒவ்வொரு வீரருக்கும் ஒரு இடத்தை ஒதுக்குவதற்கு பதிலாக சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை இறக்குவதே சிறந்தது என்று தெரிவித்திருந்தார். 

உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடந்துவருவதால் ஏற்கனவே பரிசீலனையில் இருக்கும் வீரர்கள் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி நல்ல ஃபார்மில் இருந்தால் அவர்களை உறுதி செய்யலாம். உலக கோப்பைக்கான இந்திய அணி வரும் 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஐபிஎல்லின் அடிப்படையில் அணி தேர்வு இருக்காது என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிவரும் கேஎல் ராகுலையே உலக கோப்பையில் நான்காம் வரிசையில் களமிறக்கலாம் என முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடிய ராகுல், அதன்பின்னர் பல தொடர்களில் சொதப்பினார். ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த ராகுல், ஐபிஎல்லில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அபாரமாக ஆடிவருகிறார். இதுவரை 317 ரன்களை குவித்து, இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் வார்னருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். இவ்வாறு ராகுல் சிறப்பாக ஆடிவரும் நிலையில் ராகுலையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுலை எப்படி மிடில் ஆர்டரில் இறக்க முடியும்? என்ற கேள்வி எழுபவர்களுக்கான பதிலையும் கவாஸ்கர் கொடுத்துள்ளார். 

ராகுல் ஏற்கனவே நான்காம் வரிசையில் இறங்கி ஆடியிருக்கிறார். பின்னர் ராகுலை அந்த இடத்தில் இறக்காதது ஏனோ தெரியவில்லை. ஆனால் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிவருகிறார் ராகுல். தொடக்க வீரரால் மிடில் ஆர்டரில் இறங்குவதை பெரிய பிரச்னையாக நான் பார்க்கவில்லை. தொடக்க வீரராலும் மிடில் ஆர்டரில் நன்றாக பேட்டிங் ஆடமுடியும். அதனால் ராகுலை நான்காம் வரிசையில் இறக்கலாம் என கவாஸ்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!