கங்குலி தனக்கு கொடுத்த வரப்பிரசாதத்தை தோனி கோலிக்கு கொடுக்கவில்லை..! கம்பீர் பகிரங்க குற்றச்சாட்டு

By karthikeyan VFirst Published Jul 15, 2020, 8:27 PM IST
Highlights

கங்குலி தோனிக்கு விட்டுச்சென்றதை போல, கோலிக்கு தோனி சிறந்த வீரர்கள் பலரை விட்டுச்செல்லவில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்கள் கங்குலியும் தோனியும். கங்குலி இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்கவில்லை; தோனி இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை(2011), டி20 உலக கோப்பை(2007),  சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளை வென்றுகொடுத்தவர். 

3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான். தோனி இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்திருந்தாலும், அவர் தலைமை தாங்கிய அணியில் இடம்பெற்றிருந்த சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு, இந்திய அணியில் வாய்ப்பும் ஆதரவும் அளித்து உருவாக்கியவர் கங்குலி. 

தோனி தலைமையில் உலக கோப்பைகளை வென்ற இந்திய அணியில் நட்சத்திர வீரர்களாக ஜொலித்து, அந்த கோப்பைகளை வெல்ல காரணமாக திகழ்ந்த வீரர்களான சேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய வீரர்கள் அனைவரும் கங்குலி உருவாக்கிய வீரர்கள். 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் கங்குலி தலைமையில் எழுச்சி தொடங்கியது. மேற்கண்ட இளம் வீரர்களை கொண்ட சிறந்த அணி காம்பினேஷனை கங்குலி உருவாக்கினார்.

அதை வைத்துத்தான் தோனி உலக கோப்பைகளை வென்றதுடன், தோனி வெற்றிகரமான கேப்டன் என்ற பெயரை பெறுவதற்கு அந்த அணியும் ஒரு காரணம். அந்தவகையில், கங்குலி தோனிக்கு விட்டுச்சென்றதை போல, தோனி கோலிக்கு சிறந்த அணியை கொடுக்கவில்லை என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், தோனி கேப்டன்சியிலிருந்து ஒதுங்கும்போது, அதிகளவிலான சிறந்த வீரர்களை, அடுத்த கேப்டனான கோலிக்கு கொடுக்கவில்லை. கோலியைத் தவிர ரோஹித், பும்ரா ஆகியோரை மட்டுமே தோனி விட்டுச்சென்றார்.  சர்வதேச கோப்பைகளை வென்று கொடுக்க தகுதியான நிறைய வீரர்களை தோனி, கோலிக்கு விட்டுச்செல்லவில்லை. 

ஆனால் கங்குலி, சிறந்த வீரர்களை தோனிக்கு கொடுத்துவிட்டு சென்றார். 2007 மற்றும் 2011 உலக கோப்பைகளின் நாயகன் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சேவாக், ஜாகீர் கான் ஆகிய உலகத்தரம் வாய்ந்த வீரர்களை தோனிக்கு கங்குலி கொடுத்தார். ஆனால் அப்படியான வீரர்களை கோலிக்கு தோனி கொடுக்கவில்லை என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 
 

click me!