ரிக்கி பாண்டிங் - தோனி எப்பேர்ப்பட்ட கேப்டன்கள்..? 2 பேரோட கேப்டன்சியிலும் ஆடிய வீரர் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Jul 15, 2020, 5:46 PM IST
Highlights

ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இரண்டு சிறந்த கேப்டன்களின் கேப்டன்சி குறித்து, அவர்கள் இருவரின் கேப்டன்சியிலும் ஆடிய அனுபவம் கொண்ட மைக் ஹசி பேசியுள்ளார். 
 

சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த கேப்டன்கள். பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்கும், தோனி இந்திய அணிக்கும் கேப்டனாகவும் வீரராகவும் பல அபார வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். 

ரிக்கி பாண்டிங்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அந்த காலக்கட்டத்தில் வீழ்த்தவே முடியாத வெற்றிகரமான அணியாக கெத்தாக வலம்வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு முறை தொடர்ச்சியாக உலக கோப்பையை வென்று கொடுத்தவர் பாண்டிங். அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அனைத்து அணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக திகழ்ந்தது. 

அதேபோல இந்திய அணியின் கேப்டன் தோனி, கங்குலி உருவாக்கியிருந்த இந்திய அணியை மேலும் வளர்த்தெடுத்து வெற்றிகளை குவித்து கொடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனிதான். 

பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாது தலைசிறந்த கேப்டன்களும் கூட. அந்தவகையில், அவர்கள் இருவரின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள மைக் ஹசி, அவர்களின் கேப்டன்சி ஸ்டைல் குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மைக் ஹசி, இருவரும் வெவ்வேறான குணாதிசயங்களை கொண்டவர்கள். ரிக்கி பாண்டிங் கடும் போட்டியாளர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முன்னின்று வழிநடத்துபவர் பாண்டிங். அவரது அணியில் ஆடும் வீரர்களுக்கு 100% ஆதரவளிப்பார். தோல்வியே அடையக்கூடாது; வெற்றி பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர் பாண்டிங். 

தோனி உள்ளுணர்வின்படி செயல்படுவார். மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படக்கூடிய தோனி, அவரது வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவாக இருப்பார். 

பாண்டிங் சதமடித்தாலும், டக் அவுட்டானாலும் ஒரே மாதிரி தான் இருப்பார். தோனி 4 போட்டிகளில் தொடர்ச்சியாக ஜெயித்தாலும் சரி, 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றாலும் சரி, எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பார் என்று மைக் ஹசி தெரிவித்துள்ளார். 
 

click me!