விராட் கோலியை விட வில்லியம்சன் தான் சிறந்த பேட்ஸ்மேன்..! காரணத்துடன் கூறும் முன்னாள் ஜாம்பவான்

By karthikeyan VFirst Published Jul 15, 2020, 6:25 PM IST
Highlights

விராட் கோலியை விட வில்லியம்சன் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் க்ளென் டர்னர் தெரிவித்துள்ளார். 
 

விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் - கேன் வில்லியம்சன் - ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். இவர்கள் நால்வரும் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக ஆடி தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் எனுமளவிற்கு உயர்ந்துள்ளனர். 

இவர்களில் ரூட்டை தவிர மூவரும் 3 விதமான போட்டிகளிலும் ஆடிவருகின்றனர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ரூட், டி20 போட்டிகளில் ஆடுவதில்லை. இவர்கள் நால்வரும் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்ந்தாலும், கோலி மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் தான் டாப்பில் இருக்கின்றனர். 

விராட் கோலி, வில்லியம்சன், ரூட் ஆகிய மூவருமே மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலையும் சிறந்த டெக்னிக்கையும் கொண்ட வீரர்கள். ஆனால் ஸ்மித் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தான், கோலியை விட சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். கோலி மற்றும் ஸ்மித் இடையேயான ஒப்பீடுதான் அதிகமாக செய்யப்படுகிறது. 

இந்நிலையில், கோலி மற்றும் வில்லியம்சன் குறித்து டெலிகிராஃபிற்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள 73 வயதான முன்னாள் நியூசிலாந்து வீரர் க்ளென் டர்னர், வேகம் மற்றும் ஸ்விங் ஆகிய கண்டிஷன்களில் கோலி ஆரம்பத்தில் அதிகம் ஆடியதில்லை. ஆனால், ஸ்விங் கண்டிஷன்களில் ஆடிய அனுபவம் கொண்டவர் வில்லியம்சன். ஸ்விங்கும் சீமும் இல்லாத கண்டிஷன்களில் கோலி ஆக்ரோஷமாகவும், ஆதிக்கம் செலுத்தியும் ஆடுகிறார். ஆனால் ஸ்விங் கண்டிஷன்களில் சரியாக ஆடுவதில்லை. 

கோலி ஆக்ரோஷமானவர்; வில்லியம்சன் அப்படியில்லை. ஆனால் வெற்றி வேட்கை என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். அணுகுமுறை வெவ்வேறாக இருக்கலாம். வில்லியம்சன் ஆக்ரோஷமானவர் இல்லையென்பதால், வெற்றி வேட்கை இல்லாதவர் என்று அர்த்தமல்ல. வெவ்வேறு விதமான, கடினமான கண்டிஷன்களில் ஆடுவதில், கோலியை விட வில்லியம்சன் தான் சிறந்த பேட்ஸ்மேன். பேட்டிங்கிற்கு சாதகமான கண்டிஷனில் கண்டிப்பாக கோலி தான் ஆதிக்கம் செலுத்துவார் என்று டர்னர் தெரிவித்துள்ளார். 

பேட்டிங்கிற்கு சாதகமான கண்டிஷனில் தான் கோலி சிறந்த பேட்ஸ்மேன்; ஆனால் கடினமான கண்டிஷனில் வில்லியம்சன் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்பது டர்னர் கருத்து. 

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசி, ரன்களை குவித்தாலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கடினமான மற்றும் சவாலான கண்டிஷன்களில், துணைக்கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தியதை போல ஆதிக்கம் செலுத்தியதில்லை.
 

click me!