#AUSvsIND ஒரு கேப்டனா நீங்க இதை மட்டும் பண்ணுங்க ரஹானே.. வேற எதுவுமே வேண்டாம்..! கம்பீர் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Dec 25, 2020, 9:29 PM IST
Highlights

ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தவுள்ள கேப்டன் ரஹானேவுக்கு கம்பீர் பயனுள்ள ஆலோசனையை கூறியுள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி ஆடாததால், ரஹானே தான் கேப்டன்சி செய்கிறார்.

கோலியை போல ரஹானே களத்தில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டுபவர் இல்லை என்றாலும், மிகச்சிறந்த கேப்டன். அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய 2 டெஸ்ட் போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறது. கோலி மாதிரி வெளிப்படையாக ஆக்ரோஷத்தை காட்டவில்லை என்றாலும், எதிரணிக்கு களத்திலும் சரி, களத்திற்கு வெளியேயும் சரி, தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவர் தான் ரஹானே.

அமைதியாக இருப்பவர்கள், ஆக்ரோஷமானவர்கள் இல்லை என்று அர்த்தமல்ல என்றும் ஒவ்வொருவரும் தனது தனித்துவமான பாணியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் ரஹானே குறித்து சச்சின் டெண்டுல்கர் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

ஆஸி., மண்ணில் அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தவுள்ள ரஹானேவுக்கு முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் ஆதரவும் ஆலோசனையும் வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், ரஹானேவுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக பேசியுள்ள கம்பீர், ஓவர்நைட்டில் உங்களது(ரஹானே) ஆளுமையை மட்டும் மாற்றிக்கொள்ளக்கூடாது; அதுபோதும். உங்களது ஆளுமையையும் கேரக்டரையும் நீங்கள் மாற்றிக்கொள்ள தேவையில்லை. வெவ்வேறு கேப்டன்கள் வெவ்வேறு ஆளுமையை கொண்டவர்கள். ஒவ்வொருவரும் தனது ஸ்டைலில் அணியை வழிநடத்துவார்கள். ரஹானே கோலியாக முடியாது; கோலி தோனியாக முடியாது; தோனி ஒருபோதும் கங்குலியாக முடியாது. அவரவர் அவரவர் ஸ்டைலில் கேப்டன்சி செய்ததால் வெற்றிகரமான கேப்டன்களாக இருந்தனர்.

ரஹானே ஒரேயொரு விஷயம் மட்டும்தான் செய்ய வேண்டும். வழக்கமாக ஐந்தாம் வரிசையில் இறங்கும் ரஹானே, கோலி இல்லாததால், அவரே முன்வந்து 4ம் வரிசையில் இறங்கவேண்டும். அதன்மூலம் நான் அணியை முன்னின்று வழிநடத்துகிறேன் என்ற மெசேஜை சொல்ல முடியும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

click me!