எனக்கு என்ன சொல்றதுனே தெரியலங்க.. வாயடைத்துப் போன தாதா

By karthikeyan VFirst Published Jul 1, 2019, 12:04 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டுக்கு பிறகு அனைவருக்கும் அதிர்ச்சி தான் காத்துக்கொண்டிருந்தது. ஹர்திக் பாண்டியா 45வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தோனியும் கேதரும் ஆடிய ஆட்டம், இப்படியெல்லாம் கூட ஆடமுடியுமா என்று அனைவரையும் வியப்படைய செய்தது. ஹர்திக் பாண்டியா அவுட்டான போது 45 ஓவர் முடிவில் இந்திய அணி 267 ரன்கள் அடித்திருந்தது. 
 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் மந்தமான மற்றும் எந்தவொரு நோக்கமுமே இல்லாத பேட்டிங் பெரிய பெரிய ஜாம்பவான்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 337 ரன்களை குவித்தது. 338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் டக் அவுட்டாகி வெளியேற, ரோஹித்தும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி நம்பிக்கையளித்தனர். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபிறகு ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக  ஆடினர். 

ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டுக்கு பிறகு அனைவருக்கும் அதிர்ச்சி தான் காத்துக்கொண்டிருந்தது. ஹர்திக் பாண்டியா 45வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தோனியும் கேதரும் ஆடிய ஆட்டம், இப்படியெல்லாம் கூட ஆடமுடியுமா என்று அனைவரையும் வியப்படைய செய்தது. ஹர்திக் பாண்டியா அவுட்டான போது 45 ஓவர் முடிவில் இந்திய அணி 267 ரன்கள் அடித்திருந்தது. 

கடைசி 5 ஓவர்களில் இந்திய அணிக்கு 71 ரன்கள் தேவைப்பட்டது. அடிப்பதற்கு கடினமான இலக்குதான் என்றாலும் அதை அடிக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். ஏற்கனவே ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மிகவும் மந்தமாக ஆடியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான தோனி - கேதர் ஜோடி, தாங்கள் செய்த சம்பவத்தை தாங்களே முறியடிக்கும் நோக்கில் அதைவிட படுமோசமாக ஆடினர். 

கடைசி 5 ஓவர்களில் அடிப்பதற்கு முயற்சி கூட செய்யவில்லை. இங்கிலாந்து பவுலர்கள், பந்துகளை மிகவும் மெதுவாக வீசி அடிக்கவிடாமல் செய்தனர். ஆனால் அடித்து ஆடமுடியாததற்கு அதை காரணமாக சொல்லமுடியாது. அடித்து ஆட முயற்சி செய்து, சரியாக அடித்து ஆடமுடியவில்லை என்று காரணம் சொல்லலாம். ஆனால் தோனியும் கேதரும் முயற்சியே செய்யவில்லை. இருவரும் இலக்கை விரட்டுவதற்காக ஆடுகிறார்களா அல்லது ஓவரை முடிப்பதற்காக கடமைக்காக ஆடுகிறார்களா என்ற யோசிக்கும் அளவிற்கு ஆடினர். 

கடைசி 5 ஓவர்களில் 6 டாட் பந்துகள். கடைசி 30 பந்துகளில் அடிக்கப்பட்ட ரன் வெறும் 39 மட்டுமே. தோனி - கேதர் ஜோடியின் ஆட்டம் அனைவரையுமே அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களின் பேட்டிங்கை பற்றி என்ன பேசுவதென்று தெரியாமல் வர்ணனையாளர்களே வாயடைத்து போகும் அளவிற்கு ஆடினர். 

தோனி - கேதர் ஜோடியின் பேட்டிங் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, இவர்களின் பேட்டிங் பற்றி என்ன பேசுவதென்றே எனக்கு தெரியவில்லை. டெத் ஓவர்களில் சிங்கிள் எடுத்து கொண்டிருப்பது பற்றி நான் என்ன சொல்வது? 5 விக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு 338 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஒவர்களில் அடித்து ஆடி ஜெயிக்க முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. இது வீரர்களின் மனநிலை சார்ந்த விஷயம். பந்து எப்படி வேண்டுமானாலும் வந்துட்டு போகட்டும். அதை பவுண்டரிக்கு விளாசுவதற்கான வழியைத்தான் பேட்ஸ்மேன் பார்க்க வேண்டும். பெரிய இலக்கை விரட்டும்போது கடைசி ஓவர்களில் டாட் பந்துகள் விடுகின்றனர் என்று தோனி - கேதர் ஜாதவின் மோசமான பேட்டிங் அணுகுமுறை குறித்த தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். 

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக தோனியும் கேதரும் படுமோசமாக ஆடிய பின்னர், சச்சின் டெண்டுல்கரே அவரது அதிருப்தியை தெரிவித்திருந்தார். ஆனால் அப்போது பலர் தோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இப்போது அவர்களே தோனியை விமர்சிக்கும் அளவிற்கு நிலையை உருவாக்கிவிட்டார் தோனி. 
 

click me!