நான் சொல்றத பார்த்து பலருக்கு சிரிப்பு கூட வரலாம்.. 4ம் வரிசைக்கு கங்குலியின் அதிர்ச்சிகர தேர்வு

By karthikeyan VFirst Published Mar 15, 2019, 3:48 PM IST
Highlights

உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்திய அணியின் நீண்டகால பிரச்னையாக இருந்துவரும் 4ம் வரிசை பேட்ஸ்மேன் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், 4ம் வரிசை வீரருக்கு கங்குலியின் பரிந்துரை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடிய நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு ஃபார்மில் இல்லாதது அணிக்கு பெரிய ஏமாற்றம். 

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை.

ராயுடு சொதப்பிவரும் அதேவேளையில் விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடிவருகிறார். அதனால் விஜய் சங்கரைக்கூட அந்த வரிசையில் இறக்கலாம். அப்படி செய்தால் ஒரு பவுலிங் ஆப்சனும் கூடுதலாக கிடைக்கும். ராயுடுவைக் காட்டிலும் விஜய் சங்கர் நல்ல ஃபீல்டரும் கூட. 

ஆனால் விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்குவது சாத்தியமா என்பது தெரியவில்லை. நான்காம் வரிசை வீரருக்கான சிக்கல் இன்னும் நீடித்துவரும் நிலையில், உலக கோப்பையில் நான்காம் வரிசைக்கான தனது தேர்வு யார் என்று தெரிவித்துள்ளார் கங்குலி.

இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் புஜாராவை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று கங்குலி ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, நான்காம் வரிசைக்கு நான் பரிந்துரைக்கும் வீரரை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வது சந்தேகம் தான். நான் அந்த பெயரை சொன்னதும் பலருக்கு சிரிப்பு கூட வரலாம். ஆனால் என்னை பொறுத்தவரை உலக கோப்பையில் 4ம் வரிசையில் புஜாராவை இறக்கலாம். அவரது ஃபீல்டிங் ஒரு மைனஸ்தான். ஆனால் அவர் சிறந்த பேட்ஸ்மேன். நிறைய பேருக்கு என்னுடைய பரிந்துரை அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் 4ம் வரிசையில் தரமான பேட்ஸ்மேன் வேண்டுமென்றால், இதுவரை இந்திய அணி பரிசோதித்த வீரர்களை காட்டிலும் புஜாரா அந்த வரிசைக்கு சிறந்தவராக இருப்பார். 

இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் ராகுல் டிராவிட் செய்த பணியை புஜாராவால் செய்ய முடியும். ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட தேர்வுதான். நிறைய பேர் என்னுடைய இந்த கருத்துடன் முரண்படுவார்கள் என்று எனக்கு தெரியும். இந்திய அணியின் முதல் 3 பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்து தள்ளும் நிலையில், நான்காம் வரிசை வீரராக புஜாராவை களமிறக்கலாம். அவர் அந்த வரிசைக்கும் அணிக்கும் வலு சேர்ப்பார் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவரும் புஜாரா, வெளிநாடுகளில் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் பல வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்கும் அவர், 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். 5 போட்டிகளில் ஆடி 51 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதன்பிறகு புஜாராவிற்கு ஒருநாள் அணியில் வாய்ப்பே வழங்கப்படவில்லை. 

உலக கோப்பைக்கான அணி தேர்வு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், ஒருநாள் போட்டிகளில் பெரியளவில் ஆடாத புஜாராவை திடீரென பரிந்துரைத்துள்ளார் கங்குலி. 
 

click me!