மைதானத்தில் காலை வைத்த முதல் பந்தே சிக்ஸர்!! பழைய ஃபார்முக்கு திரும்பிய யுவராஜ் சிங்.. வீடியோ

By karthikeyan VFirst Published Mar 15, 2019, 3:07 PM IST
Highlights

இந்திய அணியின் மாபெரும் சக்தியாக யுவராஜ் சிங் திகழ்ந்த காலத்தில் அதிகமான தொகைக்கு ஏலம்போன அவரை, இந்த சீசனில் அடிப்படை விலைக்குக்கூட எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜின் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 
 

இந்திய அணியில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

இந்திய அணியின் மாபெரும் சக்தியாக யுவராஜ் சிங் திகழ்ந்த காலத்தில் அதிகமான தொகைக்கு ஏலம்போன அவரை, இந்த சீசனில் அடிப்படை விலைக்குக்கூட எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜின் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

யுவராஜ் சிங்கின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி அவரை எடுத்தது. இதையடுத்து ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் யுவராஜ் சிங் இந்த சீசனில் ஆட உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல்லில் யுவராஜ் சிங் ஆட உள்ள ஆறாவது அணி. கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 5 அணிகளில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 

ஐபிஎல்லில் முதன்முறையாக் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக யுவராஜ் சிங் ஆட உள்ளார். இதையடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஐபிஎல் 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி, நான்காவது முறையாக இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. யுவராஜ் சிங், மலிங்கா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்திருப்பது அந்த அணிக்கு மேலும் உத்வேகத்தை அதிகரித்துள்ளது. 

ஐபிஎல் வரும் 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டது. ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். குருணல் பாண்டியாவிற்கு பேட்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் கடைசி 3 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற சூழலில் ஆடுமாறு பணிக்க, அந்த சவாலை ஏற்ற குருணல் பாண்டியா, கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது. 

இந்நிலையில், யுவராஜ் சிங் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி பகிர்ந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது, பயிற்சியின் முதல் பந்தையே சிக்ஸருக்கு விரட்டினார். அந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

.'s first ball at MI’s net practice - 🙌6⃣🙌 pic.twitter.com/CN2ZnHoCcY

— Mumbai Indians (@mipaltan)

ஏற்கனவே யுவராஜ் சிங்கின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அவர் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.
 

click me!