இப்போதைய இந்திய வீரர்களில் அந்த 5 பேரையும் என்னோட டெஸ்ட் அணிக்கு எடுத்திருப்பேன்..! கங்குலியின் செம செலக்‌ஷன்

By karthikeyan VFirst Published Jul 8, 2020, 10:30 PM IST
Highlights

பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, சுவாரஸ்யமான ஒரு கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
 

பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, சுவாரஸ்யமான ஒரு கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

இந்திய அணியின் மிகச்சிறந்த மற்றும் வெற்றிகரமான கேப்டன் சவுரவ் கங்குலி. கங்குலி தலைமையிலான இந்திய அணி தான், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டின் முகத்தையும், இந்திய அணி மீதான மதிப்பையும் உயர்த்தியது. கங்குலி தலைமையிலான இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் ஆகிய சீனியர் வீரர்களும் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், முகமது கைஃப், ஜாகீர் கான், நெஹ்ரா, அகார்கர் ஆகிய இளம் வீரர்களும் என அணி, நல்ல கலவையாக இருந்தது.

கங்குலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் என உலகின் அனைத்து நாடுகளையும் அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது. 

கங்குலி கேப்டன்சியில் தான் சிறந்த அணி காம்பினேஷன் உருவானது. அவரது அணியில் ஆடிய அனைவருமே, சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்தனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அதிகமான வெற்றிகளை குவித்தாலும், கங்குலி தலைமையிலான இந்திய அணி தான், இப்போது இருப்பதைவிட சிறந்த அணி கலவை என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. 

இந்நிலையில், கோலி தலைமையிலான இப்போதைய இந்திய அணியிலிருந்து 5 டெஸ்ட் வீரர்களை, உங்கள் கேப்டன்சியில் ஆடிய அணிக்கு தேர்வு செய்யுங்கள் என்று கங்குலியிடம் மயன்க் அகர்வால் கேட்டார். ஆன்லைன் உரையாடலில் கங்குலியிடம் இந்த கேள்வியை முன்வைத்தார் மயன்க் அகர்வால்.

அதற்கு பதிலளித்த கங்குலி, இது மிகவும் கடினமான கேள்வி. ஒவ்வொரு தலைமுறை வீரர்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கும். அதனால் இந்த தேர்வு மிகக்கடினமானது. கோலி மற்றும் ரோஹித்தை கண்டிப்பாக எடுப்பேன். சேவாக் அணியில் இருந்தார் என்பதால், உங்களை(மயன்க்) எடுக்க முடியாது. ஜாகீர் கான் அணியில் இருந்தார்; எனவே அவரது ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியாக பும்ராவை எடுப்பேன். ஜவகல் ஸ்ரீநாத் ஓய்வுக்கு பிறகு ஷமியை எனது அணியில் எடுத்திருப்பேன். அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் எனது அணியின் ஸ்பின்னர்கள். எனது மூன்றாவது ஸ்பின்னராக அஷ்வினை எடுப்பேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 
 

click me!