தம்பி ஏற்கனவே சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன்.. தாதாவின் பேச்சை கொஞ்சம் காது கொடுத்துத்தான் கேளுங்களேன் கோலி

By karthikeyan VFirst Published Sep 19, 2019, 1:43 PM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ஏற்கனவே கூறியிருந்த அறிவுரையை மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார். 

இந்திய அணி தேர்வு குறித்த ஆலோசனைகளையும், வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்க வேண்டும் என்பதையும் கேப்டன் கோலிக்கு அவ்வப்போது நினைவுபடுத்தி வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

கேப்டன் விராட் கோலியின் அணி தேர்வு சர்ச்சைகளை கிளப்ப தவறாது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் லெவனில் ரோஹித் சர்மா, அஷ்வின் ஆகியோரை எடுக்காதது சர்ச்சையானது.

அதுமட்டுமல்லாமல் சில வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படுவதில்லை. திறமையான சில வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளித்து அவர்களது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பு கொடுக்காததால்தான் உலக கோப்பைக்கு முன் இந்திய அணியால் நான்காம் வரிசை வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிந்து இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான தொடர் நடந்துவருகிறது. இதில் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், வீரர்களுக்கு தொடர்ச்சியாக சில வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என கங்குலி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கங்குலி, வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதில் கோலி இன்னும் கொஞ்சம் நிலைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும், ஆட்டத்திறனும் மேம்படும். இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஷ்ரேயாஸ் ஐயர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடினார். அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளித்து அவரது இயல்பான ஆட்டத்தை அனுமதிக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயரை போலவே மற்ற சில வீரர்களுக்கும் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். கோலி இதை செய்வார் என நம்புகிறேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 
 

click me!