சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும் அதில் பல குறைகள் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த 16ஆவது சீசனின் இறுதிப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அடித்த பவுண்டரி சிஎஸ்கே அணியை 5ஆவது முறையாக சாம்பியனாக்கியது.
இந்த நிலையில் தான், சிஎஸ்கே அணியின் பலவீனமே ரவீந்திர ஜடேஜா தான் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சிஎஸ்கே அணியில் சுழற்பந்து வீச்சில் சில குறைகள் இருக்கிறது. அந்த அணியைப் பொறுத்த வரையில் ஜடேஜாவை தவிர வேறு இந்திய பவுலர்கள் என்று யாரும் இல்லை. பிளேயிங் 11ல் ஜடேஜா மட்டுமே இடம் பெறுவார்.
ஜடேஜாவைத் தவிர்த்து வெளிநாட்டு பவுலர்கள் தான் அதிகளவில் பந்து வீசுவார்கள். ஜடேஜா இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிவிட்டு அணிக்கு திரும்பியிருக்கிறார். அவர் ஒரு சிறந்த டெஸ்ட் பவுலர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டிலும் ஜடேஜா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவோம் என்று அவர் கூறியுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா தவிர்த்து சுழந்து பந்து வீச்சாளராக மொயீன் அலி, மகீஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இருக்கிறார்கள்.