அவரு பிறவிலேயே கேப்டன்..! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் புகழாரம்

By karthikeyan VFirst Published Jun 20, 2020, 8:16 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிறவிலேயே கேப்டன் என புகழாரம் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார். 
 

இந்திய கிரிக்கெட் அணியை மறுகட்டமைப்பு செய்தவர் முன்னாள் கேப்டன் கங்குலி. சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கில் தலைசிறந்து விளங்கியபோதும், அவரால் ஒரு கேப்டனாக சாதிக்க முடியவில்லை. இந்திய அணி சூதாட்டப்புகாரால் சின்னபின்னமாகியிருந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, இந்திய அணியின் அணுகுமுறையை மாற்றி ஆக்ரோஷமான அணியாக உருவாக்கி, சர்வதேச கிரிக்கெட்டில் வீரநடை போட வைத்தவர் கங்குலி. 

சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், ஆஷீஸ் நெஹ்ரா, முகமது கைஃப் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் ஆதரவும் அளித்து அவர்களை வளர்த்தெடுத்த கங்குலி தான், தோனியின் வளர்ச்சிக்கும் காரணம். பின்னாளில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து, இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 சர்வதேச கோப்பைகளையும் வென்றுகொடுத்த தோனியும், கங்குலியின் கேப்டன்சியில் அவரது ஆதரவில் வளர்ந்தவர் தான். 

கங்குலியின் கேப்டன்சியில் தான் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்ததுடன், சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்தியாவுக்கென்று தனி அந்தஸ்துடன் கெத்தாக நடைபோட்டது. திறமையான வீரர்கள் ஏராளமானோரை அடையாளம் கண்டு வளர்த்துவிட்டவர் கங்குலி. 

கங்குலியின் தலைமையில் இந்திய அணி 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 21 வெற்றிகளையும் 146 ஒருநாள் போட்டிகளில் ஆடி 76 வெற்றிகளையும் பெற்றது. கங்குலியின் தலைமையில் ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகள் கழித்து இந்திய அணி முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அதேபோல கங்குலியின் தலைமையில் தான் இந்திய அணி, முதல் முறையாக பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்றது. 

இவ்வாறு இந்திய அணியை முழுமையாக மறுகட்டமைப்பு செய்து, இந்திய அணியை சீரமைத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைநிமிர வைத்த கங்குலி, தற்போது பிசிசிஐ-யின் தலைவராக இருக்கிறார். கூடிய விரைவில் ஐசிசி-யின் தலைவராகப் போகிறார். இந்நிலையில், கங்குலியை பிறவி கேப்டன் என ஸ்ரீகாந்த் புகழ்ந்துள்ளார். 

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில், கங்குலி குறித்து பேசிய ஸ்ரீகாந்த், கங்குலி அணி காம்பினேஷனை சரியாக ஃபார்ம் செய்வதில் வல்லவர். 1976ல் கிளைவ் லாயிட் எப்படி வெற்றிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை ஃபார்ம் செய்தாரோ, அதேபோல, இந்திய அணியை கங்குலி ஃபார்ம் செய்தார். சரியான அணி காம்பினேஷனை ஃபார்ம் செய்ததால் தான் கங்குலியால் வெற்றிகரமான கேப்டனாக திகழ முடிந்ததுடன் வெளிநாடுகளில் வெற்றிகளை பெற முடிந்தது. கங்குலி பிறவிலேயே தலைவர் என்று ஸ்ரீகாந்த் புகழ்ந்துள்ளார்.
 

click me!