நான் மட்டும் இந்திய அணி தேர்வாளராக இருந்தால், அவரை கண்டிப்பா அணியில் எடுப்பேன்..! முன்னாள் வீரர் தடாலடி

By karthikeyan VFirst Published Jun 20, 2020, 5:58 PM IST
Highlights

தோனி இந்திய அணியில் ஆடுவது குறித்து முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2014ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, 2017ல் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் ஒரு வீரராக ஆடிவந்தார்.

தோனி, 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக கோப்பைக்கு பின்னர் ஓய்வு பற்றி வாய் திறக்காத தோனி, அதன்பின்னர் இந்திய அணியிலோ அல்லது எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. அதனால் இந்த ஆண்டுக்கான பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 

இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அடுத்த விக்கெட் கீப்பர் உருவாக்கப்பட்டுவருகிறார். ஆனாலும் தோனி தனது ஓய்வு நிலைப்பாடு குறித்து மௌனம் காத்துவருகிறார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் தோனி இருப்பதாக தெரிகிறது. 

இதற்கிடையே கொரோனாவால், வரும் அக்டோபர் 18ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த டி20 உலக கோப்பை தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஐபிஎல் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தோனி மீண்டும் இந்திய அணியில் ஆடுவாரா மாட்டாரா என்பதே ரசிகர்களின் சந்தேகமாக இருக்கிறது. தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், ஆஷிஸ் நெஹ்ராவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

தோனி குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள ஆஷிஸ் நெஹ்ரா, நான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் கண்டிப்பாக தோனியை அணியில் தேர்வு செய்வேன். ஆனால் அவர் ஆட விரும்புகிறாரா இல்லையா என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. அதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

தோனி இந்திய அணிக்காக ஆட தயாராக இருந்தால், அவரை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும் என்பது நெஹ்ராவின் கருத்து. 
 

click me!