இந்திய அணிக்கு அந்த பையன் தேவையே இல்ல.. முன்னாள் அதிரடி வீரர் தடாலடி

By karthikeyan VFirst Published Nov 11, 2019, 12:35 PM IST
Highlights

இந்திய அணி டி20 உலக கோப்பைக்காக தயாராகிவரும் நிலையில், இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது இந்திய அணிக்கு தேவையில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியும் பல பரிசோதனைகளை செய்துவருகிறது. இளம் வீரர்களை பரிசோதிக்கும் விதமாக நிறைய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 

இந்திய அணியில் தற்போதைக்கு இருக்கும் ஒரே இடது கை ஃபாஸ்ட் பவுலர் கலீல் அகமதுதான். அதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது. டி20 உலக கோப்பையில், பும்ரா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் ஆகியோர் ஆடுவது உறுதி. கலீல் அகமதுவுக்கு தொடர் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில், அவர் பெரியளவில் சோபிக்காமல் தொடர்ந்து ஏமாற்றமளித்துவருகிறார். 

கலீல் அகமதுவின் பவுலிங்கில் வேகமும் இல்லை, துல்லியமும் இல்லை. வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகளிலுமே அவர் சரியாக ஆடவில்லை. முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார் கலீல். அந்த போட்டியில் முடிவை தீர்மானிக்கும் 19வது ஓவரை வீசிய அவர், அந்த ஓவரில் 3 பவுண்டரிகளை வாரி வழங்கி, இந்திய அணியின் தோல்விக்கு வித்திட்டார். அதேபோல இரண்டாவது போட்டியிலும் 4 ஓவர்களை வீசிய அவர், 44 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். நேற்று நாக்பூரில் நடந்த கடைசி போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 

கலீல் அகமது ஒரு போட்டியில் கூட சரியாக பந்துவீசவில்லை. ஆனாலும் அவர் மூன்று போட்டிகளிலும் ஆடினார். ஷர்துல் தாகூருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. கலீல் அகமது தொடர்ச்சியாக சொதப்பிவரும் நிலையில், அவர் இந்திய அணிக்கு தற்போதைய சூழலில் தேவையே இல்லை என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், வெளிப்படையாகவே சொல்கிறேன்.. கலீல் அகமது தற்போதைய சூழலில் இந்திய அணிக்கு சுத்தமாக பொருந்தாத வீரர். அவர் கண்டிப்பாக விரைவில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
 

click me!