ராகுல் டிராவிட் சஹாவிடம் தப்பா ஒண்ணும் சொல்லலையே..! முன்னாள் தேர்வாளர் கருத்து

By karthikeyan VFirst Published Feb 25, 2022, 5:16 PM IST
Highlights

ராகுல் டிராவிட் ரிதிமான் சஹாவிடம் தவறாக ஒன்றும் சொல்லவில்லை என்று டிராவிட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் முன்னாள் தேர்வாளர் சரன்தீப் சிங்.
 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹாவின் பெயர் இடம்பெறவில்லை. சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தபோதிலும், ரிதிமான் சஹாவிற்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

இப்போது ரிஷப் பண்ட் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக திகழும் நிலையில், அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு கேஎஸ் பரத்தை மாற்று விக்கெட் கீப்பராக உருவாக்க முனைகிறது இந்திய அணி. இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, சீனியர் வீரர்களான ரஹானே, புஜாரா, சஹா, இஷாந்த் சர்மா ஆகியோர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

இளம் வீரர்களை உருவாக்கி எதிர்காலத்திற்கான அணியை கட்டமைக்கவுள்ளதால், 37 வயதான ரிதிமான் சஹா இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இந்த காரணத்தை எடுத்துக்கூறி, இனிமேல் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடமில்லை என்பதை அவரிடமே பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேரடியாக கூறிவிட்டார்.

பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் டிராவிட்டுடனான உரையாடல் குறித்து பேசிய ரிதிமான் சஹா, கங்குலி தனக்கு ஆதரவளித்ததாகவும், ஆனால் ராகுல் டிராவிட் அணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் ராகுல் டிராவிட் தன்னை, வேண்டுமென்றால் ஓய்வு அறிவித்துக்கொள் என்று கூறியதாகவும் சஹா தெரிவித்தார்.

சஹாவின் ஸ்டேட்மெண்ட் குறித்து விளக்கமளித்த ராகுல் டிராவிட், ரிதிமான் சஹா இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்கு மரியாதை அளித்தப்பதாகவும், அதனால்தான் அவர் அணியிலிருந்து நீக்கப்படும் விஷயத்தை மீடியா மூலம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதால், தானே நேரடியாக சஹாவிடம் தெரிவித்ததாகவும், சஹாவிடம் தான் மிக நேர்மையாக நடந்துகொண்டதாகவும் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

ரிதிமான் சஹா விவகாரம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரன்தீப் சிங், டிராவிட் ரிதிமான் சஹாவிடம் தவறாக ஒன்றும் செய்யவில்லை. தனக்கு 37 வயதாகிவிட்டது என்பதை சஹாவே உணர்ந்து செயல்பட வேண்டும். இளம் விக்கெட் கீப்பர் தான் அணியில் ஆடுவார். சஹாவிற்கு எப்படியும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கப்போவதில்லை. அப்படியிருக்கையில், அவரை அணியில் எடுப்பதில் எந்த பிரயோஜனமுமில்லை. ரிஷப் பண்ட்டுக்குத்தான் இந்திய அணியில் முன்னுரிமை கொடுக்கப்படும். அவர் தான் நீண்டகால விக்கெட் கீப்பர் என்று சரன்தீப் சிங் தெரிவித்தார்.
 

click me!