ரவி சாஸ்திரியின் மூக்கை பப்ளிக்கா உடைத்த தோனி.. சுவாரஸ்யமான சம்பவத்தின் ஃப்ளாஷ்பேக்

By karthikeyan VFirst Published Sep 23, 2019, 3:37 PM IST
Highlights

12 ஆண்டுகளுக்கு முன் பப்ளிக்கா வைத்து தோனி, ரவி சாஸ்திரியின் மூக்கை உடைத்த சம்பவத்தின் ஃப்ளாஷ்பேக்கை பார்ப்போம். 

ரவி சாஸ்திரியின் மூக்கை தோனி பொதுவெளியில் உடைத்த சம்பவம் ஒன்று அரங்கேறி நேற்றுடன் 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.

2007 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் படுமோசமாக தோற்று லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் ராகுல் டிராவிட் பதவி விலகியதை அடுத்து, இந்திய அணியை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி செல்லும் விதமாக இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டது. அப்போதைய இளம் வீரர் தோனி, கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

தோனி கேப்டன் ஆனதுமே 2007 டி20 உலக கோப்பையை எதிர்கொண்டார். ஒருநாள் உலக கோப்பையில் படுமோசமாக அடிவாங்கிய இந்திய அணிக்கு, அடுத்த சில மாதங்களிலேயே டி20 உலக கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார் தோனி. 

அந்த உலக கோப்பை வெற்றி, வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்ததோடு, இந்திய அணிக்கு மிகப்பெரிய மரியாதையையும் சம்பாதித்து கொடுத்தது. அந்த உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. 

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, யுவராஜ் சிங்கின் அதிரடி அரைசதத்தால் 188 ரன்களை குவித்தது. யுவராஜ் சிங் 30 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்தார். 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. அந்த இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 173 ரன்களை மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

இந்த போட்டிக்கு முன்னதாக அதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ரவி சாஸ்திரி(அப்போது வர்ணனையாளராக மட்டுமே இருந்தார்), இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிதான் வெல்லும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், அந்த போட்டியில் வென்றபின்னர், போட்டிக்கு பின்னரான ப்ரெசெண்டேசனில் சாஸ்திரி தான் இண்டர்வியூ செய்தார். அப்போது, சாஸ்திரி கேள்வி கேட்பதற்கு முன்னதாக, நான் உங்களிடம் முதலில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் என்று சொல்லி தோனி ஒரு விஷயத்தை சொன்னார். அதாவது, இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தான் வெல்லும் என்று நீங்கள் கருத்து தெரிவித்திருந்ததாக ஒரு கட்டுரையில் படித்தேன். உங்கள் கருத்தை நானும் எங்க பசங்களும் சேர்ந்து தவறாக்கிவிட்டோம் என்றார். 

இந்த சம்பவம் நடந்து நேற்றுடன் 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.
 

click me!