யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு..!

By karthikeyan VFirst Published Feb 15, 2021, 8:30 PM IST
Highlights

தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

கொரோனா லாக்டவுன் காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் நேரலையில் உரையாடினர். அப்படி, ரோஹித் சர்மாவும் யுவராஜ் சிங்கும் இன்ஸ்டாகிராம் லைவில் உரையாடும்போது, இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் போடும் டிக் டாக் வீடியோக்கள் குறித்து கருத்து தெரிவித்த யுவராஜ் சிங், உருப்படியாக செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. அவர்(சாஹல்) ஷேர் செய்யும் வீடியோக்களை பார்த்தீர்களா? என்று கூறியதுடன் சாதிய ரீதியாக தலித் மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

யுவராஜ் சிங்கின் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. யுவராஜ் சிங் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தினர். எதிர்ப்பு பெரியளவில் கிளம்பியதையடுத்து, ”பாகுபாடு பார்க்கும் நபர் நான் இல்லை. நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. என் பேச்சு யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் தொடர்ந்து மக்களின் நலனுக்காக செயல்பட விரும்புகிறேன்” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் அந்த விவகாரத்தை சாதாரணமாக விடாமல், ஹரியானா மாநிலத்தின் ஹிசார் டிவிசன் வழக்கறிஞர் ஒருவர் யுவராஜ் சிங்கிற்கு எதிராக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் யுவராஜ் சிங் மீது ஐபிசி 153, 153A, 295, 505 ஆகிய பிரிவுகளின் கீழும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்தியில் நடந்த இந்த சம்பவத்திற்கு, 8 மாதங்களுக்கு பிறகு யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

click me!