ஒரே ஓவரில் 5 சிக்ஸர்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? ஐபிஎல் ஏலத்திற்கு முன் தெறிக்கவிட்ட அர்ஜுன் டெண்டுல்கர்

By karthikeyan VFirst Published Feb 15, 2021, 7:18 PM IST
Highlights

கிளப் மேட்ச் ஒன்றில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் விளாசி அசத்தினார் அர்ஜுன் டெண்டுல்கர்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் ஜாம்பான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.  இடது கை ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், அண்டர் 19 அணியில் ஆடியுள்ளார். இந்தியா ஏ, இந்திய அணி, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளின் நெட் பவுலராக இருந்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்துவரும் அர்ஜுன் டெண்டுல்கர், இந்த முறை தான் முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை சேர்த்துள்ளார். அவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம். அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்  மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்திய போட்டியில் MIG கிரிக்கெட் கிளப்பிற்காக ஆடிய அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிகச்சிறப்பாக ஆடி அசத்தினார். முதலில் MIG கிளப் அணி தான் பேட்டிங் ஆடியது. அந்த அணி வீரர் பிரக்னேஷ் கண்டில்வார் சதமடித்தார். கெவின் அல்மேடியா என்ற வீரர் 96 ரன்கள் அடித்தார். அர்ஜுன் டெண்டுல்கர் அதிரடியாக ஆடி 31 பந்தில் 77 ரன்களை விளாசினார்.   ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி அசத்தினார் அர்ஜுன் டெண்டுல்கர். அதனால் எம்.ஐ.ஜி கிளப் அணி 45 ஓவரில் 385 ரன்களை குவித்தது.

386 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இஸ்லாம் ஜிம்கானா அணியை 191 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது எம்.ஐ.ஜி கிளப் அணி. பேட்டிங்கில் அசத்திய அர்ஜுன் டெண்டுல்கர், பவுலிங்கிலும் 41 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஐபிஎல் ஏலம் வரும் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதற்கு 2 நாளைக்கு முன்பாக, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அர்ஜுன் டெண்டுல்கர் மாஸ் காட்டியிருப்பது அவர் மீதான ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

click me!