#ENGvsIND அவங்க 2 பேர்ல ஒருத்தர தூக்கிட்டு இவரை இந்திய அணியில் சேர்க்கணும்..! ஏன்னா இவரு பெரிய மேட்ச் வின்னர்

By karthikeyan VFirst Published Aug 22, 2021, 5:08 PM IST
Highlights

இந்திய அணியில் ரஹானே - புஜாரா ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை சேர்க்கலாம் என்று முன்னாள் வீரர் ஃபரோக் எஞ்சினியர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடிவருகிறது. முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். ஆனால் புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவரும் ஃபார்மில் இல்லாமல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவந்தது இந்திய அணியை கடுமையாக பாதித்தது.

ஆனால் 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் இக்கட்டான நேரத்தில் சீனியர் வீரர்களான புஜாராவும் ரஹானேவும் பொறுப்புடன் ஆடி இந்திய அணியை காப்பாற்றினர். ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் அடித்தனர். அவர்கள் இருவரும் ஃபார்முக்கு வந்தது இந்திய அணிக்கு பாசிட்டிவான விஷயம்.

ரஹானேவாவது ஆஸி.,யில் மெல்போர்ன் டெஸ்ட்டில் சதமடித்தார். ஆனால் புஜாராவோ, 2019ம் ஆண்டுக்கு பிறகு சதமே அடிக்கவில்லை. ஆஸி., சுற்றுப்பயணம், இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய அனைத்து போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பினார்.

புஜாராவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்குமளவிற்கு மோசமாக ஆடினார். கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தான், 2வது டெஸ்ட்டில் நன்றாக ஆடினார்.

ஆனாலும் அவரது தொடர் சொதப்பல் அவர் மீதான நம்பிக்கையை இழக்கவைக்கிறது. பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், சூர்யகுமார் யாதவ் மாதிரியான வீரர்கள் வெளியே உட்கார்ந்திருப்பதால், ரஹானே - புஜாரா மீது அதிக நெருக்கடி இருக்கிறது.

இந்நிலையில், ரஹானே - புஜாரா ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு, சூர்யகுமார் யாதவை சேர்க்கலாம் என்று முன்னாள் வீரர் ஃபரோக் எஞ்சினியர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஃபரோக் எஞ்சினியர், நான் சூர்யகுமார் யாதவின் மிகப்பெரிய ரசிகன். அவர் க்ளாஸ் பிளேயர். புஜாரா அலது ரஹானேவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவை ஆடவைக்கலாம். புஜாராவும் ரஹானேவும் மிகச்சிறந்த வீரர்கள் தான். ஆனால் சூர்யகுமார் யாதவ் மேட்ச் வின்னர். விரைவில் 70-80 ரன்களை அடித்துவிடுவார். வேகமாக சதமடிக்கவல்ல வீரரும் கூட. அவரது ஆக்ரோஷ பேட்டிங் அணியின் வெற்றிக்கு உதவும். எனவே இங்கிலாந்துக்கு எதிரான அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் ஆடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று ஃபரோக் எஞ்சினியர் தெரிவித்தார்.
 

click me!