
விராட் கோலி ஆக்ரோஷமான கொண்டாட்டத்துக்கு சொந்தக்காரர். அவர் இந்திய அணி மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தபோது விக்கெட் வீழ்ச்சி, வெற்றி ஆகியவற்றை வெறித்தனமாக ஆக்ரோஷமாக கொண்டாடுவார். அதற்காக பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும், களத்தில் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வெட்கப்படாத வீரர் கோலி.
அந்தவகையில், அவர் கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னரும், அவரது உற்சாகம் குறையவேயில்லை. இன்னும் ஆக்ரோஷமாகத்தான் கொண்டாடிவருகிறார்.
ஆர்சிபி - சிஎஸ்கே இடையேயான போட்டி புனேவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 173 ரன்களை குவித்து, 174 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது. 174 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 20 ஒவரில் 160 ரன்கள் மட்டுமே அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் கேப்டனும் ஃபினிஷருமான தோனி, 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஜோஷ் ஹேசில்வுட் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை மிட் விக்கெட் திசையில் தோனி தூக்கியடிக்க, அந்த கேட்ச்சை ரஜாத் பட்டிதார் பிடிக்க, தோனி ஆட்டமிழந்தார். தோனியின் விக்கெட்டை மிகவும் ஆக்ரோஷமாக வெறித்தனமாக தனக்கே உரிய பாணியில் கொண்டாடினார் கோலி.
தோனியின் விக்கெட்டை கோலி கொண்டாடிய விதத்தை ரசிகர்கள் ரசிக்கவில்லை. கோலியை கடுமையாக விமர்சித்து டுவீட்டுகளை பறக்கவிடுகின்றனர்.