உலக கோப்பை 2019: டீம் என்னனு இங்கிலாந்து கேப்டனுக்கே தெரியாது.. இந்திய அணியில் அப்படிலாம் இல்லங்க

By karthikeyan VFirst Published May 21, 2019, 3:08 PM IST
Highlights

நல்ல ஃபார்மில் எதிரணிகளை தெறிக்கவிட்டு வெற்றிகளை குவித்துவரும் இங்கிலாந்து அணி, நம்பர் 1 ஒருநாள் அணியாக திகழ்கிறது. கவாஸ்கர், பாண்டிங், ஸ்டீவ் வாக் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இங்கிலாந்து தான் இம்முறை கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். 
 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான அணியாக இங்கிலாந்து அணி பார்க்கப்படுகிறது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. 

2015 உலக கோப்பையில் மோசமாக தோற்று வெளியேறிய இங்கிலாந்து அணி, அதன்பின்னர் மிகுந்த ஆக்ரோஷத்துடன் வெகுண்டெழுந்துள்ளது. இயன் மோர்கன் ஒரு கேப்டனாக, இங்கிலாந்து அணியை அபாரமாக வளர்த்தெடுத்துள்ளார். 

நல்ல ஃபார்மில் எதிரணிகளை தெறிக்கவிட்டு வெற்றிகளை குவித்துவரும் இங்கிலாந்து அணி, நம்பர் 1 ஒருநாள் அணியாக திகழ்கிறது. கவாஸ்கர், பாண்டிங், ஸ்டீவ் வாக் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இங்கிலாந்து தான் இம்முறை கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். 

பேர்ஸ்டோ - ராய் அதிரடி தொடக்க ஜோடி, 3ம் வரிசையில் ரூட் என்ற நிதானம், மிடில் ஆர்டரில் இயன் மோர்கன், பட்லர் என அதிரடி வீரர்கள், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகிய ஆல்ரவுண்டர்கள் என அபாரமான அணியை கொண்டுள்ளது இங்கிலாந்து. அந்த அணியில் பேட்டிங் டெப்த் சிறப்பாக உள்ளது. கடைசி வீரர் வரை பேட்டிங் ஆடுகின்றனர். 

டாம் கரன், டேவிட் வில்லி, மார்க் உட், பிளங்கெட், அடில் ரஷீத் ஆகியோரும் பேட்டிங் ஆடுவர். அந்த அணி நிறைய ஆல்ரவுண்டர்களை கொண்டுள்ளது. 15 வீரர்களை கொண்ட அணியை இங்கிலாந்து ஏற்கனவே அறிவித்தது. ஜோஃப்ரா ஆர்ச்சரை அணியில் சேர்க்காதது சலசலப்பை ஏற்படுத்தியது. 

இங்கிலாந்து வீரர்கள் அனைவருமே சிறப்பாக ஆடுவதால், வீரர்களை தேர்வு செய்வது தேர்வுக்குழுவிற்கு கடும் சவாலாக உள்ளது. இந்நிலையில், அணி குறித்து பேசிய கேப்டன் இயன் மோர்கன், 15 வீரர்கள் யார் யார் என்பதை என்னால் திட்டவட்டமாக கூறமுடியாது. அனைவருமே சிறப்பாக ஆடிவருகின்றனர். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அபாரமாக ஆடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி, எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. 

வீரர்களை தேர்வு செய்வது தேர்வுக்குழுவிற்கே மிகவும் கடினமாகத்தான் இருக்கும். ஆனாலும் எங்கள் அணியில் எந்த 15 வீரர்கள் எடுக்கப்பட்டாலும் சரி, அவர்களின் ரோல் என்னவென்பது அவர்களுக்கு தெரியும். அனைவருமே தேர்வுக்குழுவிடமிருந்து வரும் ஃபோன் காலுக்காக காத்திருக்கின்றனர் என இயன் மோர்கன் தெரிவித்தார். 

இயன் மோர்கன் கூறுவதன் அடிப்படையில் பார்த்தால், அணி தேர்வில் கேப்டன் இயன் மோர்கனின் ஆதிக்கம் இல்லையென்பது தெரிகிறது. ஆனால் இந்திய அணியை பொறுத்தமட்டில் அப்படியெல்லாம் கிடையாது. தேர்வுக்குழு தலைவரை விட கேப்டன் கோலி அதிக அனுபவமுள்ளவர் மற்றும் அதிகமான கிரிக்கெட் அறிவு கொண்டவர் என்பதால் கோலியின் ஆலோசனையை தேர்வுக்குழு கருத்தில் கொண்டே ஆக வேண்டும். அதற்கும் அப்பாற்பட்டு கோலியின் ஆதிக்கம் இருக்கும் என்றால் கூட அது மிகையாகாது. 
 

click me!