
IND vs ENG: 6 England Players Get Ducked: இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்) அடித்து அசத்தினார். பின்பு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.
அணியை மீட்ட ஹாரி ப்ரூக், ஸ்மித்
முதல் டெஸ்ட்டில் சதம் விளாசிய பென் டக்கெட் மற்றும் ஆலி போப் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆகாஷ் வேகத்தில் வீழ்ந்தனர். சாக் க்ரொலி 19 ரன்னில் சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஜோ ரூட் (22 ரன்), பென் ஸ்டோக்ஸ் (0) ஆகியோரை சிராஜ் அடுத்தடுத்து அவுட் ஆக்கினார். இதனால் இங்கிலாந்து அணி 84/5 என பரிதவித்த நிலையில், ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித் அதிரடி சதம் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இங்கிலாந்து அணி ஆல் அவுட்
ஓடிஐ கிரிக்கெட் போன்று அதிரடியாக விளையாடிய இவர்கள் 6வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேகரித்தனர். அணியின் ஸ்கோர் 387 ரன்கள் ஆனபோது ஹாரி ப்ரூக் 158 பந்தில் ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார். அதன்பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்வரிசை வீரர்கல் கிறிஸ் வோக்சை (5) தவிர மற்றவர்கள் டக் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிடி சதம் விளாசிய ஜேமி ஸ்மித் 207 பந்தில் 184 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
6 பேர் டக் அவுட்
இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இங்கிலாந்து அணி இந்தியாவை விட 180 ரன்கள் பின் தங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்தின் பென் டக்கெட், ஆலி போப், பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் மற்றும் சோயிப் பஷிர் ஆகிய 6 பேர் டக் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து அணியில் 6 பேர் டக் அவுட் ஆவது சமீபத்திய ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.
மோசமான சாதனை
அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மூன்று பேர் டக் அவுட்டாகியுள்ளனர். 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இதுபோன்ற ஒரு சரிவு ஏற்படுவது இதுவே முதல் முறை. கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்துக்கு இந்த மோசமான நிலை ஏற்பட்டு இருந்தது. அதிரடியான பேஸ்பால் ஆட்டத்தை கையில் எடுத்த பிறகு அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த அளவுக்கு மோசமாக விளையாடியது இதுவே முதன் முறையாகும்.