வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு.. தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து..?

By karthikeyan VFirst Published Jul 12, 2020, 4:50 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் கடந்த 8ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரைக் பிராத்வெயிட் மற்றும் டௌரிச் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ப்ரூக்ஸ் மற்றும் சேஸ் ஆகியோரும் நன்றாக ஆடினர். எனவே அந்த அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் அடித்தது. 

114 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, நான்காம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் அடித்திருந்தது. இந்நிலையில் கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை ஆர்ச்சரும் மார்க் உட்டும் தொடர்ந்தனர். அவர்கள் இருவரையுமே ஷெனான் கேப்ரியல் வீழ்த்தினார். இதையடுத்து 313 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்ரியல், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்து அணி 199 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 200 ரன்கள் என்ற எளிய இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி விரட்டிவருகிறது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனின் தொடக்கத்திலேயே இங்கிலாந்தை ஆல் அவுட் செய்துவிட்டதால், இன்று முழுவதும் ஆடலாம் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் அணி நன்றாக பேட்டிங் ஆடினால், 200 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியும். அதேநேரத்தில் ஆண்டர்சன், ஆர்ச்சர் ஆகியோர் அசத்தலாக வீசும்பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமான போட்டி. அந்த அணி தவறு செய்யவில்லை என்றால் எளிதாக வெற்றி பெறமுடியும்.
 

click me!