
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, டேரைல் மிட்செலின் பெரிய சதம்(190) மற்றும் டாம் பிளண்டெலின் அபார சதம்(106) ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை 2ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் தொடங்கிய இங்கிலாந்து அணி, 4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசன் வரை ஆடியது. இங்கிலாந்து அணியிலும் 2 வீரர்கள் பெரிய சதமடித்தனர். ஜோ ரூட் 176 ரன்களையும், ஆலி போப் 145 ரன்களையும் குவித்தனர். நியூசிலாந்துக்குத் தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக இங்கிலாந்து அணி அபாரமாக பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 539 ரன்களை குவித்தது. அலெக்ஸ் லீஸ்(67) மற்றும் பென் ஃபோக்ஸ்(56) ஆகிய இருவரும் அரைசதம் அடித்து பங்களிப்பு செய்தனர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 14 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸை ஆடிவருகிறது.