India vs England 5th Test: குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் 218 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து!

By Rsiva kumar  |  First Published Mar 7, 2024, 3:13 PM IST

இந்தியாவிற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.


தரம்சாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மார்க் வுட் அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று இந்திய அணியில் ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், ரஜத் படிதார் காயம் காரணமாக விலகிய நிலையில் தேவ்தத் படிக்கல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக விளையாடினர். பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் இணைந்து மாறி மாறி பந்து வீசினர். எனினும், எந்த பலனும் இல்லாத நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச வந்தார். அவர் வந்ததும் பென் டக்கெட் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு ஓவர்கள் கொடுக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

அடுத்ததாக ஆலி போப் 11 ரன்களில் நடையை கட்டினார். அதிரடி காட்டிய ஜாக் கிராவ்லியை கிளீன் போல்டாக்கினார். தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்த நிலையில், குல்தீப் யாதவ் ஓவரிலேயே 29 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் 26 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 8ஆவது முறையாக ரூட் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றியுள்ளார்.

அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 பந்துகள் பிடித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 4ஆவது முறையாக குல்தீப் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி அதிவேகமாக 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார். இதற்காக அவர் 1871 பந்துகள் எடுத்துக் கொண்டுள்ளார்.

அக்‌ஷர் படேல் 2205 பந்துகளும், ஜஸ்ப்ரித் பும்ரா 2520 பந்துகளும் 50 விக்கெட்டுகள் கைப்பற்றுவதற்கு எடுத்துக் கொண்டுள்ளனர். எஞ்சிய 4 விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார். ஆரம்பத்தில் அஸ்வினுக்கு விக்கெட்டுகள் விழாத நிலையில், கடைசியில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இறுதியாக இங்கிலாந்து 57.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 218 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

click me!