#INDvsENG 2வது இன்னிங்ஸில் அஷ்வின் அசத்தல் பவுலிங்..! மெகா முன்னிலையை நோக்கி இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Feb 8, 2021, 2:58 PM IST
Highlights

முதல் டெஸ்ட்டில் இந்தியாவிற்கு மெகா இலக்கை நிர்ணயிக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் இரட்டை சதம்(218), சிப்ளி(87), ஸ்டோக்ஸின்(82) சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 578 ரன்களை குவித்தது. 3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் இங்கிலாந்து அணி கடைசி 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் 29 ரன்னிலும், கேப்டன் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ரஹானேவும் வெறும் ஒரு ரன்னில் நடையை கட்ட, 73 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் புஜாராவும் ரிஷப் பண்ட்டும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

புஜாரா 73 ரன்களும், அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்த ரிஷப் பண்ட் 91 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் அஷ்வினும் வாஷிங்டன் சுந்தரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 3ம் நாள் ஆட்டத்தை முடித்த அவர்கள் இருவருமே 4ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். அஷ்வின் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். அஷ்வின் விக்கெட்டுக்கு பின்னர், சுந்தர் ஒருமுனையில் முடிந்தவரை வேகமாக அடித்து ஆடி ஸ்கோர் செய்ய, மறுமுனையில் நதீம், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், 85 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். கடைசிவரை களத்தில் இருந்தும் கூட சதத்தை தவறவிட்டார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியாவுக்கு ஃபாலோ ஆன் கொடுக்க வாய்ப்பிருந்தும் கூட, ஃபாலோ ஆன் கொடுக்காமல், 241 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி முடிந்தவரை வேகமாக ஸ்கோர் செய்துவிட்டு, மெகா இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயிக்கும் முனைப்பில் களமிறங்கியது. ரோரி பர்ன்ஸ் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார். 

ஆட்டத்தின் நான்காம் நாள் என்பதால் ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக திரும்பியதால், அஷ்வின் அசத்தலாக வீசி மளமளவென விக்கெட்டுகளை வீழ்த்தினார். டோமினிக் சிப்ளி 16 ரன்னிலும், லாரன்ஸ் 18 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடித்து ஆடிய ரூட் 32 பந்தில் 40 ரன்கள் அடித்து பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். ஆலி போப் 28 ரன்னில் ஆட்டமிழக்க, 130 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை இழந்தது.  ஜோஸ் பட்லரும் டோமினிக் பெஸ்ஸும் இணைந்து ஆடிவருகின்றனர்.

400 ரன்களுக்கும் அதிகமான இலக்கை இங்கிலாந்து நிர்ணயிக்கும் என்பதால், கடைசி இன்னிங்ஸ் இந்தியாவிற்கு கடும் சவாலாகவே இருக்கும்.
 

click me!