நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை தூக்கல.. ஐசிசி விதிப்படி ஜெயிச்சுருக்கு அவ்வளவுதான்.. உலக கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிய நியூசி.,யின் துரதிர்ஷ்டம்

By karthikeyan VFirst Published Jul 15, 2019, 9:59 AM IST
Highlights

உலக கோப்பை இறுதி போட்டியில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான். ஆனால் நியூசிலாந்து அணியின் கடைசி நேர துரதிர்ஷ்டங்கள் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையுமே கலங்கடித்தது. 
 

உலக கோப்பை இறுதி போட்டியில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான். ஆனால் நியூசிலாந்து அணியின் கடைசி நேர துரதிர்ஷ்டங்கள் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையுமே கலங்கடித்தது. 

உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. லண்டன் லார்ட்ஸில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணியில் இந்த தொடர் முழுவதுமே வில்லியம்சன் மட்டுமே சிறப்பாக ஆடியுள்ளார். அந்த அணி பேட்டிங்கை பொறுத்தமட்டில் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகிய இருவரையுமே சார்ந்துள்ளது. நீஷம், கிராண்ட் ஹோம் ஓரளவிற்கு பங்களிப்பு செய்கின்றனர்.

அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் நன்றாக இருந்திருந்தால் நியூசிலாந்து அணிக்குத்தான் வாய்ப்பு அதிகம். எனினும் இறுதி போட்டியில் நிகோல்ஸும் லேதமும் ஓரளவிற்கு ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இந்த உலக கோப்பை தொடர் முழுவதுமே நியூசிலாந்து அணியின் பேட்டிங் சரியில்லை. ஒரு போட்டியில் கூட 300 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டவில்லை. அந்த அணியின் பேட்டிங் ஆர்டரில் டெப்த் இருந்திருந்தால் அந்த அணி நல்ல ஸ்கோரை அடித்திருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. அந்த அணியின் பலமே பவுலிங் தான். பேட்டிங்கில் சொதப்பினாலும் முழுக்க முழுக்க பவுலிங்கால் மட்டுமே உலக கோப்பை தொடர் முழுவதும் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. 

இறுதி போட்டியிலும் அதுதான் நடந்தது. 242 ரன்கள் என்ற இலக்கை, மிகச்சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட இங்கிலாந்து அணியை எளிதாக அடிக்கவிடாமல் கடைசி பந்து வரை கொண்டு சென்று, மீண்டும் சூப்பர் ஓவரிலும் டஃப் கொடுத்தது நியூசிலாந்து அணி. தொடக்கம் முதலே எளிதாக ரன்களை கொடுத்துவிடாமல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடியை உருவாக்கிய நியூசிலாந்து பவுலர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே இருந்தனர். 86 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் ஸ்டோக்ஸும் பட்லரும் இணைந்து இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர்.

இருவருமே அரைசதம் அடித்து அபாரமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், பட்லரை வீழ்த்தி ஃபெர்குசன் பிரேக் கொடுத்தார். கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த இக்கட்டான சூழலில் 49வது ஓவரை வீசிய நீஷம் அபாரமாக வீசி இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தினார். அந்த ஒவரின் 3வது பந்தில் பிளங்கெட்டை வீழ்த்தினார். 4வது பந்தில் ஸ்டோக்ஸ் தூக்கியடித்த பந்தை பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்த போல்ட் பவுண்டரி லைனை மிதித்ததால் அதிர்ஷ்டவசமாக சிக்ஸர் கிடைத்தது. போல்ட் ஒரு சிறந்த ஃபீல்டர். பவுண்டரி லைனில் இதுபோன்ற பல அபாரமான கேட்ச்களை அசால்ட்டாக பிடித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நேற்று, பவுண்டரி லைனை சரியாக கணிக்காததால் மிதித்துவிட்டார். அதனால் இங்கிலாந்து அணிக்கு அதிர்ஷ்டவசமாக 6 ரன்கள் கிடைத்தது. 

இதையடுத்து கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இப்போதும்கூட நியூசிலாந்தின் கட்டுப்பாட்டில்தான் போட்டி இருந்தது. அந்த ஓவரை வீசிய போல்ட், முதல் இரண்டு பந்துகளில் ரன்னே கொடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடித்தார் ஸ்டோக்ஸ். நான்காவது பந்தில் எதிர்பாராத விதமாக கப்டில் த்ரோ அடித்த பந்து ரன்னை பூர்த்தி செய்வதற்காக டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. அதனால் மீண்டும் அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்துக்கு 6 ரன்கள் கிடைத்தது. நியூசிலாந்து அணி போராட போராட அந்த அணிக்கு துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்துகொண்டே இருந்தன. 

ஆனாலும் நம்பிக்கையை விடாமல் கடைசி வரை போராடி போட்டியை டிராவில் முடித்தது. சூப்பர் ஓவரிலும் போட்டி டிரா ஆனதால், இறுதி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில், ஐசிசி விதிப்படி இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையை முதன்முதலாக வென்றது. 

இங்கிலாந்து அணி ஐசிசி விதிப்படி கோப்பையை வென்றதே தவிர, நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வெல்லவில்லை. பெரியளவில் பேட்டிங் இல்லாதபோதும் கேன் வில்லியம்சனின் கேப்டன்சி மற்றும் பவுலிங்கால் மட்டுமே இந்தளவிற்கு இறுதி போட்டிவரை வந்து, இறுதி போட்டியில் கடுமையாக போராடியது நியூசிலாந்து. நியூசிலாந்து அணியும் கோப்பைக்கு தகுதியான அணி. ஆனால் ஒரு அணிக்குத்தான் கோப்பையை கொடுக்க முடியும் என்கிற வகையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து வென்றது. 

ஆனால் நியூசிலாந்து அணிக்கு கோப்பை கிடைக்காமல் போனது, நியூசிலாந்து ரசிகர்களை மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையே நொறுக்கியது. நியூசிலாந்து அணிக்கு இது தோல்வியே அல்ல. ஏனெனில் நியூசிலாந்து அணி தோற்கவேயில்லை. உலக கோப்பையை இங்கிலாந்து வென்றிருந்தாலும் உலக கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை நியூசிலாந்து வென்றுவிட்டது. 
 

click me!