359லாம் எங்களுக்கு ஒரு டார்கெட்டா..? பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து

By karthikeyan VFirst Published May 15, 2019, 10:16 AM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 359 ரன்கள் என்ற இலக்கை அசால்ட்டாக எட்டி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து. 

இங்கிலாந்து அணி செம ஃபார்மில் உள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையானதாக இங்கிலாந்து அணிதான் பார்க்கப்படுகிறது. அதிலும் உலக கோப்பை இங்கிலாந்து நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், சொந்த மண்ணில் தாங்கள் தான் கெத்து என்பதை மிகவும் ஆணித்தரமாக பறைசாற்றியுள்ளது பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்தின் வெற்றி. 

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்தது. இரண்டாவது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. 

இதையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பவுலிங் தேர்வு செய்தார். போட்டி நடந்த பிரிஸ்டாலின் கவுண்டி மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. அதனால் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 

தொடக்க வீரர் ஃபகார் ஜமான் 2 ரன்களிலும் பாபர் அசாம் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக் நிலைத்து நின்று அபாரமாக ஆடினார். ஹரிஸ் சொஹைல் இமாமிற்கு ஒத்துழைப்பு கொடுத்து ஓரளவிற்கு ஆடினார். ஆனால் அவரும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை டாம் கரன் சிறந்த ரன் அவுட்டின் மூலம் பிரித்தார். 

அதன்பின்னர் சர்ஃபராஸ் அகமதுவும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய இமாம் உல் ஹக் சதமடித்து அசத்தினார். இமாமிற்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய அசிஃப் அலி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். ஆனால் அவரும் அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே ஆட்டமிழந்து, பெரிய இன்னிங்ஸை ஆடாமல் வெளியேறினார். விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போட்டிருந்த இமாம் 151 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

46வது ஓவரில் இமாம் அவுட்டாக, 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்து இன்னிங்ஸை முடித்தது பாகிஸ்தான் அணி. 359 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராயும் ஜானி பேர்ஸ்டோவும் இணைந்து பாகிஸ்தான் அணியின் பவுலிங்கை பொளந்து கட்டிவிட்டனர். 

முதல் விக்கெட்டை போடவே பாகிஸ்தான் அணி திணறியது. தொடக்க வீரர்கள் இருவருமே அரைசதம் அடித்து அபாரமாக ஆடினர். ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் என எந்த பவுலிங்குமே ராய் - பேர்ஸ்டோ ஜோடி முன் எடுபடவில்லை. முதல் விக்கெட்டுக்கு ராயும் பேர்ஸ்டோவும் இணைந்து 159 ரன்களை குவித்தனர். ராய் 76 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த பேர்ஸ்டோ, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7வது சதத்தை அடித்தார். 128 ரன்களை குவித்த பேர்ஸ்டோ ஜுனைத் கானின் வேகத்தில் போல்டாகி வெளியேறினார். 

அதன்பின்னர் ரூட்டும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து சிறப்பாக ஆடி வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர். ஆனால் ரூட் 43 ரன்களிலும் ஸ்டோக்ஸ் 37 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிறகு கேப்டன் இயன் மோர்கனும் மொயின் அலியும் இணைந்து அதிரடியாக ஆடி 45வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற வைத்தனர். இதையடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார். 

click me!